கிரானைட் கல்குவாரியை விவசாயிகள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு


கிரானைட் கல்குவாரியை விவசாயிகள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு
x

தண்டராம்பட்டு அருகே கிரானைட் கல்குவாரியை விவசாயிகள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை

வாணாபுரம்

தண்டராம்பட்டு அருகே கிரானைட் கல்குவாரியை விவசாயிகள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கிரானைட் கல்குவாரி

தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது அகரம்பள்ளிப்பட்டு கிராமம். இங்கு தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான கிரானைட் கல்குவாரி உள்ளது. இந்த கல்குவாரி மூலம் கிரானைட் கல் வெட்டப்பட்டு அதனை வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

இதனால் கல்குவாரிகளில் அதிக அளவில் கற்களை மலை போல் குவித்து வருகின்றனர். அப்படி குவித்து வரும் பெரிய பாறைகள் அடிக்கடி அருகில் இருக்கும் விவசாய நிலங்களுக்கு உருண்டு செல்கிறது.

இதனால் பயிர்கள் சேதம் ஏற்பட்டு வருவதாகவும் பாறைகள் உருண்டு வருவதை தடுக்க வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கல்குவாரி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

முற்றுைகயிட முயற்சி

கல்குவாரி நிர்வாகத்தினர் பாறைகளை அதிகளவில் கொட்டி விவசாய நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருவதாகவும், தொடர்ந்து பாறைகள் உருண்டு வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி இன்று காலை 11 மணியளவில் கல்குவாரியை அப்பகுதியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட முயன்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வாணாபுரம் போலீசார் விரைந்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது விவசாயிகள் பாறைகள் தொடர்ந்து விவசாய நிலங்களில் உருண்டு விழுந்து வருவது மட்டுமல்லாமல் பயிர்கள் சேதம் அடைகிறது.

சிறிய கல்லாக இருந்தால் தூக்கி போட்டு விடலாம் .ஆனால் பெரிய அளவில் பாறைகள் இருப்பதால் அதனை அகற்ற முடியவில்லை. இதனால் விவசாயம் செய்ய முடியாமல் கடும் சிரமப்படுகிறோம். எனவே இதனை தடுக்க வேண்டும் என்றும் கூறினர்.

இதனையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story