ஆக்கிரமிப்பு அகற்றத்தின் போது தள்ளுவண்டி கடையை நொறுக்கியதால் பரபரப்பு
திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்பு அகற்றத்தின் போது தள்ளுவண்டி கடையை நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் வடக்கு திசையில் அமைந்துள்ள அம்மணி அம்மன் கோபுர மதில் சுவர் அருகே நகராட்சி ஊழியர்கள் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது அங்கு தற்காலிகமாக தள்ளுவண்டியில் பேன்சி கடை வைத்து நடத்தி வந்த கவிதா என்பவருக்கு சொந்தமான கடையை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். அப்போது அந்த கடை அப்பளம் போல் நொறுக்கியது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த கவிதா தரையில் அமர்ந்து ஒப்பாரி வைத்து அழுதார்.
அந்த தள்ளுவண்டி கடையில் இருந்த பெண்களுக்கான வளையல், சிறுவர்களுக்கான விளையாட்டு பொம்மைகள் உள்ளிட்டவை உடைந்து நாசமானது. அப்போது பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஆதரவாக சிலர் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை டவுன் போலீசார் மற்றும் நகராட்சி அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பேசி சமாதானம் செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தினால் அந்த பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.