மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள்கூட்டத்தில் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
குறைதீர்வு நாள் கூட்டம்
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி, பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.
கூட்டத்தில் நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, வீடுகள், வேலைவாய்ப்பு, பொதுப்பிரச்சினை, குடிநீர்வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.
மொத்தம் 320 மனுக்கள் பெறப்பட்டது. அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், மனு நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணங்களை மனுதாரர்களுக்கு வழங்கிடவும் கலெக்டர் உத்தரவிட்டார்.
தீக்குளிக்க முயற்சி
சோளிங்கர் தாலுகா தலங்கை கிராமத்தை சேர்ந்த கால்நடை துறையில் உதவியாளராக பணிபுரியும் மாற்றுத் திறனாளி ஜெயக்குமார் மனுகொடுக்க வந்திருந்தார். அவர் கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு திடீரென உடலில் மண்எண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.
இதை பார்த்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடி வந்து அவரிடம் இருந்து மண்எண்ணெய் கேனை கைப்பற்றி, தண்ணீர் ஊற்றி தடுத்து நிறுத்தினர்.
பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியதில், ''அம்மூரில் வசிக்கும் பைனான்சியரிடம் நிலத்தை அடமானம் வைத்து, ஒப்பந்த முறையில் வாங்கிய பணம் ரூ.75 ஆயிரத்தை வாலாஜாவில் நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கொடுத்தேன். அதன் பிறகு மீதம் உள்ள பணத்தையும் ஊர் பஞ்சாயத்து மூலம் கொடுத்து விட்டேன். ஆனால் இதுவரை என்னுடைய 48 சென்ட் நிலத்தை தரவில்லை. அதனால் தீக்குளிக்க முயன்றேன்'' என்றார்.
அதைத்தொடர்ந்து அவரிடம் இருந்து மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 3 மாற்றுத் திறனாளிகளுக்கு காதொலி கருவிகள், 3 பேருக்கு சக்கர நாற்காலிகள், ஒருவருக்கு கையடக்க திறன்பேசி ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி சுந்தரம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, துணை கலெக்டர்கள் தாரகேஸ்வரி, முரளி, மணிமேகலை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.