பூக்கடைக்குள் புகுந்த பாம்புகளால் பரபரப்பு
ராமநாதபுரத்தில் நேற்று அதிகாலை பூக்கடை பெட்டிக்குள் புகுந்த பாம்புகளால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரத்தில் நேற்று அதிகாலை பூக்கடை பெட்டிக்குள் புகுந்த பாம்புகளால் பரபரப்பு ஏற்பட்டது.
பஸ் நிலையம்
ராமநாதபுரம் புதிய பஸ்நிலைய பகுதியில் நகராட்சி சார்பில் கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இதுதவிர நடைபாதை பகுதியில் சிறுசிறு நடைபாதை வியாபாரிகள் கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவ்வாறு நேற்று காலை புதிய பஸ்நிலையம் பகுதியில் போக்குவரத்து அலுவலகம் அருகில் பூக்கடை வைத்துள்ள அண்ணாநகரை சேர்ந்த பிரியா என்பவர் வியாபாரத்தை தொடங்குவதற்காக வந்தார்.
இதற்காக அவர் நேற்று இரவு மூடி வைத்த பூ பெட்டிகளை எடுத்து அதில் இருந்த பூக்களை வெளியே எடுக்க முயன்றபோது பாம்பு ஒன்று சுருண்டு படுத்தபடி இருந்ததை கண்டு அலறினார்.அவரது அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து பார்த்தபோது 5 அடி நீளம் உள்ள பெரிய பாம்பு ஒன்று பூக்கள் உள்ள பெட்டிக்குள் இருந்தது. பாம்பை கண்ட பயணிகள் அலறி அடித்து அங்கிருந்து ஓடினர். இது குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பாம்பினை பத்திரமாக பெட்டிக்குள் இருந்து எடுத்து காட்டுப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர். பாம்பினை பத்திரமாக மீட்டதால் பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
பாரதிநகர்
இதேபோல ராமநாதபுரம் பாரதிநகர் பகுதியில் நேற்று காலை சூப்பர்மார்கெட் அருகில் பூக்கடை வைத்துள்ளவர் பூக்கள் வைத்திருந்த பெட்டியை திறந்து பார்த்தார்.. அந்த பெட்டிக்குள் பாம்பு ஒன்று சுருண்டபடி இருந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று பாம்பை பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனர். ராமநாதபுரத்தில் நேற்று காலை பூக்கள் வைத்துள்ள பெட்டிகளுக்குள் பாம்புகள் அடைக்கலம் புகுந்து பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.