பெருமாள் கோவில்களில் பங்குனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்


பெருமாள் கோவில்களில் பங்குனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்
x

பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி, களக்காடு வரதராஜ பெருமாள் கோவில்களில் பங்குனி பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி, களக்காடு வரதராஜ பெருமாள் கோவில்களில் பங்குனி பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ராஜகோபால சுவாமி

பாளையங்கோட்டை வேதநாராயணர், அழகியமன்னார், ராஜகோபால சுவாமி கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

அதன்படி இந்த ஆண்டுக்கான விழாவுக்கு கடந்த 17-ந் தேதி கால்நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

ரோகினி நட்சத்திரமான நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், திருமஞ்சனம் நடைபெற்றது. அா்த்த மண்டபத்தில் உற்சவா் ருக்மணி சத்யபாமா சமேத ராஜகோபால சுவாமி ராஜ அலங்காரத்தில் காட்சி கொடுத்தாா்.

இதைத்தொடர்ந்து கருடக்கொடியானது சக்கரத்தாழ்வாருடன் 4 மாடரத வீதிகளில் வலம் வந்தது. தொடா்ந்து கொடிமரத்திற்கும், கொடிப் பட்டத்திற்கும் பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கொடி மரத்தில் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது.

5-ந் தேதி தேரோட்டம்

தொடா்ந்து திருமஞ்சனம், கொடி மரத்திற்கு பட்டு வஸ்திரம் அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று நிறைவாக கோபுர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. உற்சவருக்கும், நட்சத்திர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

11 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் காலை மற்றும் மாலையில் ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத ராஜகோபாலா் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருதல் நடைபெறுகிறது. சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 5-ந்தேதி நடக்கிறது.

வரதராஜ பெருமாள்

களக்காடு வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, பெருமாள் மற்றும் தேவியர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பெருமாள் ஸ்ரீ பூமி, நீலா தேவியர்களுடன் முன் மண்டபத்திற்கு எழுந்தருளினார். அதன் பின்னர் கோவில் கொடி மரத்தில் கருடன் படம் பொறித்த திருக்கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கருட சேவை

திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், இரவில் பல்வேறு வாகனங்களில் பெருமாள் திருவீதி உலா வருதலும் நடக்கிறது. 5-ம் திருநாளான 31-ந் தேதி இரவில் 2 கருட வாகனங்களில் பெருமாளும், வெங்கடாஜலபதியும் உலா வருகின்றனர். 2-ந் தேதி மாலை 5 மணிக்கு திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது. 3-ந் தேதி இரவில் பெருமாள் குதிரை வாகனத்தில் திருவீதி உலா வருகிறார்.

சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 5-ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது. அன்று மாலை 5 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. 6-ந் தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை விழா மண்டகப்படிதாரர்கள், கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.


Next Story