பாலசுப்பிரமணிய சாமி கோவிலில் பங்குனி தேரோட்டம்
வடசென்னிமலை பாலசுப்பிரமணிய சாமி கோவிலில் பங்குனி தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
தலைவாசல்
வடசென்னிமலை பாலசுப்பிரமணிய சாமி கோவிலில் பங்குனி தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
பங்குனி உத்திர விழா
தலைவாசல் அருகே வடசென்னிமலை பாலசுப்பிரமணிய சாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்து வந்தது. நேற்று அதிகாலை 2 மணிக்கு மூலவருக்கு பால் அபிஷேகம், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், திருநீறு உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது.
நேற்று மாலை 5.30 மணி அளவில் காட்டுக்கோட்டை புதூர் கட்டளைதாரர்கள் ராஜசேகரன், அழகப்பன், தங்கவேல், செல்வம் ஆகியோர் காட்டுக்கோட்டை புதூர் கிராமத்தில் இருந்து பூஜை பொருட்களுடன் ஊர்வலமாக வந்து தேர்காலில் சிறப்பு பூஜை செய்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை அடைந்தது. முன்னதாக விநாயகர் தேரோட்டம் நடந்தது.
நாளை சத்தாபரணம்
தேரோட்டத்தில் ஆத்தூர் உதவி கலெக்டர் சரண்யா, துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், தலைவாசல் தாசில்தார் ஜெயக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. சின்னதுரை, தலைவாசல் ஒன்றிய அட்மா குழு தலைவர் சாத்தப்பாடி மணி, தலைவாசல் வடக்கு ஒன்றிய செயலாளர் பாலமுருகன், வடசென்னிமலை பாலசுப்பிரமணிய சாமி சஷ்டி கமிட்டி நிர்வாகி பழனிவேல் மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமானவர்கள் திரண்டு வந்து தேரை படம் பிடித்து இழுத்தனர்.
நாளை (வெள்ளிக்கிழமை) சத்தாபரணம், மாவிளக்கு பூஜை, சாமி நூதனம் மலர் பல்லக்கில் வீதி உலா ஆகியன நடக்கிறது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) சாமி ஊர்வலமாக வந்து மஞ்சள் நீராடும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் குணசேகரன், தக்கார் பரமேஸ்வரன், கோவில் ஆய்வாளர் அருள்மணி மற்றும் கட்டளைதாரர்கள், விழா குழுவினர் செய்து இருந்தனர்.