சிவசுப்பிரமணிய சாமி கோவில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா


சிவசுப்பிரமணிய சாமி கோவில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா
x

தர்மபுரி அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சாமி கோவில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தர்மபுரி

பங்குனி உத்திர தேர்த்திருவிழா

தர்மபுரி அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சாமி கோவில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, வழிபாடு நடந்தது. பின்னர் கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் மற்றும் வாஸ்து பூஜை நடைபெற்றது. பின்னர் யாகசாலையில் இருந்து புனிதநீர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கொடிமரத்துக்கு ஊற்றி சிறப்பு வழிபாடுகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து இரவு ஆட்டுக்கடா வாகனத்தில் சாமி உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இன்று (வியாழக்கிழமை) நரி வாகன உற்சவமும், நாளை (வெள்ளிக்கிழமை) பூத வாகன உற்சவமும், நாளை மறுநாள் (சனிக்கிழமை) நாக வாகன உற்சவமும் நடக்கிறது. வருகிற 2-ந் தேதி காலை பால்குட ஊர்வலமும், இரவு சாமிக்கு திருக்கல்யாணம், தோரணவாயில் ஊஞ்சல் சேவை மற்றும் மயில்வாகனத்தில் சாமி உற்சவம் நடக்கிறது. வருகிற 3-ந் தேதி விநாயகர் தேரோட்டமும், யானை வாகன உற்சவமும் நடக்கிறது.

தேரோட்டம்

விழாவில் முக்கிய நாளான வருகிற 4-ந் தேதி பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று காலை சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடு நடக்கிறது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. தொடர்ந்து பெண்கள் மட்டும் நிலை பெயர்க்கும் தேரோட்டமும், மாலை பொதுமக்கள் வடம் பிடிக்கும் தேரோட்டமும் நடக்கிறது. விழாவையொட்டி கோவில் வளாகம் மற்றும் செங்குந்தர் திருமண மண்டபத்தில் அன்னதானம் வழங்கும் விழா நடக்கிறது.

வருகிற 5-ந் தேதி வேடர்பறி உற்சவமும், 6-ந் தேதி கொடி இறக்கம், மஞ்சள் நீராட்டு விழா மற்றும் பல்லக்கு உற்சவம் நடக்கிறது. 7-ந் தேதி சயன உற்சவமும், 8-ந் தேதி விடையாற்றி உற்சவமும் நடக்கிறது. விழாவையொட்டி தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறையினர், விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.


Next Story