பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்


பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்
x

பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. "அரோகரா" சரண கோஷம் முழங்க திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திண்டுக்கல்

பங்குனி உத்திரம்

தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனியில் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதில் தைப்பூச திருவிழாவில் பாதயாத்திரையாகவும், பங்குனி உத்திர திருவிழாவில் தீர்த்தக்காவடி எடுத்தும் பக்தர்கள் பழனிக்கு வருவது சிறப்பு அம்சமாகும்.

கோடைகாலமான பங்குனி, சித்திரை மாதங்களில் பழனி முருகப்பெருமானை குளிர்விக்கும் பொருட்டு, கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து பழனியாண்டவருக்கு அபிஷேகம் செய்து வழிபடுவர்.

அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா, பழனி முருகன் கோவிலின் உபகோவிலான திருஆவினன்குடியில் கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.

கொடியேற்றம்

இதையொட்டி நேற்று முன்தினம் இரவு கிராம சாந்தி, வாஸ்து சாந்தி பூஜை, அஸ்திரதேவர் உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நேற்று காலை திருஆவினன்குடி கோவிலில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம் நடந்தது. பின்னர் சேவல், மயில் படங்கள் பொறிக்கப்பட்ட கொடிப்படம் கொடிமரம் முன்பு வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.

மேலும் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு பால், பழம், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம் என 16 வகை பொருட்களால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

தீர்த்தக்காவடி

கொடியேற்றத்தை காண முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் வந்து சப்பரத்தில் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து அஸ்திரதேவர், விநாயகர் சிலை முன்பு மயூர யாகம், வாத்திய பூஜைகள் நடைபெற்றன. பின்னர் காலை 10.55 மணிக்கு வேதமந்திரங்கள் முழங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

கொடியேற்றத்தின்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா... வீரவேல் முருகனுக்கு அரோகரா" என சரண கோஷம் எழுப்பினர். பின்னர் ஓதுவார்கள் திருமுறை பாடியதை அடுத்து கொடிமரம், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு தீபாராதனை நடைபெற்றது. விழாவின் முதல் நாளான நேற்று பல்வேறு ஊர்களில் இருந்து தீர்த்தக்காவடி எடுத்து வந்த பக்தர்கள் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

காப்புக்கட்டு

கொடியேற்றத்தையொட்டி பழனி முருகன் கோவிலில் நேற்று பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையில் மூலவருக்கு 16 வகை அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. பின்னர் மூலவர் சன்னதியில் உள்ள விநாயகருக்கு காப்புக்கட்டு நடந்தது.

அதைத்தொடர்ந்து சண்முகர், உற்சவர், துவார பாலகர்கள், மயில்வாகனம் மற்றும் பெரியநாயகி அம்மன் கோவிலில் சோமாஸ் கந்தர், சிவன், பெரியநாயகிஅம்மன், நடராஜர், சிவகாமி அம்மன் ஆகியோருக்கு காப்புக்கட்டு நடைபெற்றது.

பகல் 12.30 மணிக்கு மேல் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானையுடன் அடிவாரம் பட்டக்காரர் மடத்தில் எழுந்தருளினார். அங்கு முதல் நாள் மண்டகப்படி நடைபெற்றது.

திருக்கல்யாணம், தேரோட்டம்

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 3-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை 5.45 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அடுத்த நாள் (செவ்வாய்க்கிழமை) பங்குனி உத்திர தேரோட்டம் நடக்கிறது.

திருவிழாவுக்கான ஏற்பாடுகளை பழனி கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து செய்து வருகின்றனர். விழாவின் பூஜை முறைகளை பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணியம் உள்ளிட்ட குருக்கள்கள் செய்து வருகிறார்கள்.

கொடியேற்ற நிகழ்ச்சியில் பழனி கோவில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் பிரகாஷ், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மணிமாறன், சுப்பிரமணியன், சித்தனாதன் சன்ஸ் உரிமையாளர்கள் சிவனேசன், பழனிவேலு, கார்த்திக், கந்தவிலாஸ் உரிமையாளர்கள் செல்வக்குமார், நவீன், நரேஷ், சரவணபொய்கை கந்த விலாஸ் உரிமையாளர் பாஸ்கரன், கண்பத் கிராண்ட் உரிமையாளர் ஹரிஹரமுத்து, வி.பி.எஸ். கிராண்ட் ஓட்டல் உரிமையாளர் பெரியசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. வேணுகோபாலு, ஸ்ரீ பெரியநாயகி அம்மன் கல்வி அறக்கட்டளை தலைவர் சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story