முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா


முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா
x
தினத்தந்தி 6 April 2023 12:50 AM IST (Updated: 6 April 2023 1:35 AM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரம், தியாகதுருகம் பகுதியில் முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்,

சங்கராபுரம் பூட்டை சாலையில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. விழாவில் நேற்று காலையில் மணிநதியிலிருந்து சக்திகரகம் அழைத்து வரப்பட்டது. அப்போது விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி, காவடி எடுத்தும், அலகு குத்தியும், சிறிய வடிவிலான தேர்களை இழுத்தும், முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதையடுத்து வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிசாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, திருக்கல்யாணம் நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் சங்கராபுரம் சன்னதி தெரு பாலசுப்ரமணியர் கோவில், முதல் பாலமேடு ஏகாம்பரேஸ்வரர் கோவில், அ.பாண்டலம் முருகர் கோவில், குளத்தூர் சரவணபுரம் ஆறுமுகபெருமான் கோவில் உள்ளிட்ட முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தியாகதுருகம்

இதேபோன்று தியாகதுருகம் கடைவீதி பகுதியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சாமி கோவிலில் பங்குனி உத்திர விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலையில் பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு விநாயகர் மற்றும் சுப்பிரமணிய சாமி, வள்ளி தெய்வானைக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்க மகா தீபாராதனை நடைபெற்றது.

முன்னதாக காலை 6 மணிக்கு கோட்டகுளம் கரையில் இருந்து பக்தர்கள் கா வடி எடுத்து கோவிலுக்கு ஊர்வலம் வந்து, நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு சாமி வீதி உலா நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். இதேபோல் தியாகதுருகம் பகுதியில் நாகலூர், கண்டாச்சிமங்கலம், கூத்தக்குடி, வேளாக்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது.


Next Story