கழுகாசலமூர்த்தி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்


தினத்தந்தி 28 March 2023 12:15 AM IST (Updated: 28 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் நடந்தது.

தூத்துக்குடி

கழுகுமலை:

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பங்குனி உத்திர திருவிழா

தமிழகத்தின் தென் பழனி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரை கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு நேற்று காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 6 மணிக்கு திருவனந்தல் பூஜை, விளா பூஜை, மற்றும் காலசந்தி பூஜைகள் நடைபெற்றது. காலை 7 மணியளவில் கோவில் கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றபட்டு, கொடிமரத்திற்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூர்த்தி பட்டர் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் பூஜைகளை நடத்தினர். இதில் கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன், பவுர்ணமி கிரிவல குழு தலைவர் மாரியப்பன், பிரதோஷ குழு தலைவர் முருகன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தேரோட்டம்

முக்கிய விழாவான தேரோட்டம் வருகிற ஏப்.4-ந் தேதி நடக்கிறது. அன்று காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 6 மணிக்கு திருவனந்தல் பூஜை மற்றும் காலசந்தி பூஜைகள் நடக்கிறது. காலை 7.30 மணியளவில் சுவாமி, வள்ளி தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தேரானது முக்கிய வீதிகளின் வழியாக சென்று பின்னர் நிலையை வந்தடைகிறது. அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. இரவு 7 மணியளவில் கோவில் சீர்பாதம் தாங்கிகள் சார்பில் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். இரவு 8மணிக்கு சுவாமி, வள்ளி தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

ஏப்.6-ந்தேதி திருகல்யாண நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


Next Story