குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தையால் பரபரப்பு


குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தையால் பரபரப்பு
x
தினத்தந்தி 6 April 2023 12:15 AM IST (Updated: 6 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வனவிலங்குகள் நடமாட்டம்

கோத்தகிரியில் இருந்து அரவேனு வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் சாலை பிரதான சாலையாக உள்ளது. இந்த சாலையில் அரவேனு பகுதியை இணைக்கும் மாற்று சாலையாக கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் இருந்து கோட்டாஹால் வழியாக அரவேனு செல்லும் சாலை விளங்குகிறது. இங்குள்ள பெரியார் நகர் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. இந்த பகுதி வனப்பகுதியை ஒட்டி உள்ள பகுதி என்பதால், இங்குள்ள தேயிலை தோட்டங்கள் மற்றும் சாலைகளில் கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது.

சிறுத்தை புகுந்தது

இந்தநிலையில் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து, அங்குள்ள சாலை வழியாக நடந்து சென்றது. பின்னர் அந்த அருகிலுள்ள தேயிலை தோட்டத்திற்குள் புகுந்து மறைந்தது. இந்த காட்சிகள் அங்குள்ள வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்த தகவல் வெளியே பரவியதால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் அச்சமடைந்து உள்ளனர். மேலும் கரடிகள் மற்றும் சிறுத்தைகள் அருகிலுள்ள தேயிலை தோட்டத்திற்குள் முகாமிட்டுள்ளதால், பச்சை தேயிலை பறிக்க செல்லும் தொழிலாளர்களும் பணிக்கு செல்ல தயக்கம் காண்பித்து வருகின்றனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோரிக்கை

ஏற்கனவே இதே பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2 சிறுத்தைகள் மற்றும் 2 கருஞ்சிறுத்தைகள் உலா வந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சிறுத்தை ஒன்று அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்த வளர்ப்பு நாயை கவ்வி சென்றது. இது தவிர அங்குள்ள சாலையில் தினமும் கரடிகள், முள்ளம் பன்றிகள் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது. எனவே வனவிலங்குகள் பொதுமக்களை தாக்கி அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படும் முன் வனத்துறையினர் வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணித்து அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story