உழவு பணியின்போது விவசாய நிலத்தில் திடீர் பள்ளத்தால் பரபரப்பு


உழவு பணியின்போது விவசாய நிலத்தில் திடீர் பள்ளத்தால் பரபரப்பு
x
சேலம்

எடப்பாடி:-

எடப்பாடி அடுத்த ஆலமரத்து காடு பகுதியை சேர்ந்தவர் சோலையப்பன் (வயது 45). இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கோடை உழவு செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மதியம் சோலையப்பன் விவசாய நிலத்தை டிராக்டர் மூலம் உழுது கொண்டிருந்தார்.

அப்போது திடீரென வயலின் நடுப்பகுதியில் பெரிய பள்ளம் ஏற்பட்டு அதில் டிராக்டரின் சக்கரம் சிக்கி கொண்டது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உதவியுடன் டிராக்டரை அப்புறப்படுத்தி பார்த்தபோது நிலத்தடியில் அறை போன்ற பள்ளம் இருப்பதை கண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பள்ளத்தில் பழங்கால பொருட்கள் இருக்கலாம் என்று தகவல் பரவியது. இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் கூட்டம் கூடியது. அப்போது சிலர் பள்ளத்தில் டார்ச்லைட் அடித்து பார்த்தபோது புகை மண்டலமாக காட்சி அளித்தது. பின்னர் அப்பகுதி முதியவர்கள் இது பழங்காலத்தில் தானியங்களை கொட்டி வைக்க பயன்படும் தானிய குழியாக இருக்கலாம் என்று கூறினர். இதையடுத்து புதையலை காண ஆர்வமுடன் வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story