டேங்கர் லாரியில் இருந்து கரியமில வாயு வெளியேறியதால் பரபரப்பு


டேங்கர் லாரியில் இருந்து கரியமில வாயு வெளியேறியதால் பரபரப்பு
x

கோவை - கேரளா எல்லையான வாளையாறு அருகே டேங்கர் லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில், டேங்கர் லாரியில் இருந்த கரியமில வாயு வெளியேறியது. இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோவை,

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து, கோவையில் உள்ள சோடா தயாரிக்கும் நிறுவனத்திற்கு கரியமில வாயு (கார்பன் டை ஆக்சைடு) ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று வந்து கொண்டு இருந்தது.

தமிழக - கேரளா எல்லையான வாளையாறு வட்டப்பாறா அருகே வந்தபோது, கோவைக்கு காய்கறி ஏற்றி வந்த மற்றொரு லாரி, டேங்கர் லாரியின் பின்புறமாக மோதியது.

வாயு வெளியேறியதால் பரபரப்பு

இதில் டேங்கர் லாரியின் வால்வில் உடைப்பு ஏற்பட்டு, உள்ளே இருந்த கரியமில வாயு பயங்கர சத்தத்துடன் வெளியேறியது. லாரியில் இ்ருந்து வெளியேறிய கரியமில வாயு சுமார் 25 அடி உயரத்திற்கு சென்று புகைபோல் காட்சி அளித்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. அப்போது வாகனங்களில் வந்தவர்கள் தூரத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு அங்கிருந்து ஓடினார்கள்.

தகவல் அறிந்து வந்த வாளையாறு போலீசார் உடனடியாக பாலக்காடு - கோவை நெடுஞ்சாலையில் போக்குவரத்தை முழுமையாக நிறுத்தினர். பின்னர் அங்கு வந்த கஞ்சிக்கோடு தீயணைப்பு துறையினர் கரியமில வாயு வெளியேறுவதை தடுக்க தீவிரமாக போராடினர். சுமார் 2 மணி நேரத்திற்கு பின் டேங்கர் லாரியில் உடைப்பு ஏற்பட்ட வால்வை தீயணைப்பு படையினர் சரிசெய்து வாயு வெளியேறுவதை முழுமையாக தடுத்து நிறுத்தினர்.

குடியிருப்பு அல்லாத தோட்டங்கள் நிறைந்த பகுதி என்பதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story