பெருந்துறையில் பயங்கரம் கட்டையால் தாக்கி பெண் படுகொலை மர்மநபருக்கு வலைவீச்சு
மர்மநபருக்கு வலைவீச்சு
பெருந்துறையில் கட்டையால் தாக்கி பெண்ணை படுகொலை செய்த மர்மநபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கட்டிட வேலை
ஈரோடு மாவட்டம் பெருந்துறை திருவேங்கிடம்பாளையம் புதூரை சேர்ந்தவர் ராஜா.இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருடைய மனைவி சாந்தா (வயது 57).
சொந்த ஊரை விட்டு வெளியே வந்த சாந்தா பெருந்துறை சந்தைப்பேட்டை வணிக வளாகத்தில் தங்கியிருந்து கட்டிட வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வந்தார். இவருடைய மகன் கார்த்தியும், தாயாருடன் பெருந்துறை சந்தைப்பேட்டை வணிக வளாகத்தில் இரவு நேரத்தில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
ரத்த வெள்ளத்தில்...
இந்தநிலையில் சாந்தா குடிப்பழக்கத்துக்கு ஆளாகி தினமும் மதுகுடித்து வந்துள்ளார். சில நேரங்களில் மகன் கார்த்தியும், தாயாருடன் சேர்ந்து குடிப்பாராம். குடிபோதையில், தாயும், மகனும் சண்டையும் போட்டுக்கொள்வார்களாம்.
நேற்று முன்தினம் நள்ளிரவு சாந்தா குடிபோதையில் இருந்தபோது, யாரோ ஒருவர் அவரை தலையில் கட்டையால் தாக்கியதாக தெரிகிறது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சாந்தா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து செத்தார்.
பரபரப்பு
இதுபற்றிய தகவல் அறிந்ததும் பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதாபேகம், சப்- இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கொலை நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் ரத்தக்கறை படிந்த கட்டை கிடந்ததையும் போலீசார் கண்டனர்.
எனவே கட்டையால் தாக்கி சாந்தா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.. இதைத்தொடர்ந்து சாந்தாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.