சாலையோரம் கிடந்த மர்ம பொருளால் பீதி
திண்டுக்கல் ரெயில் நிலையம் அருகே சாலையோரம் கிடந்த மர்ம பொருளால் பீதி ஏற்பட்டது. மோப்பநாயுடன், போலீசார் வெடிகுண்டு சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மர்ம பொருள்
திண்டுக்கல் ரெயில் நிலையத்தையொட்டி குட்ஷெட் உள்ளது. இதன் அருகே சாலையோரத்தில் நேற்று காலை சிவப்பு நிறத்தில் பந்து வடிவிலான மர்ம பொருள் ஒன்று கிடந்தது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில், அது வெடிகுண்டாக இருக்கலாம் என்ற சந்தேகம் அவர்களுக்கு எழுந்தது.
இதுகுறித்து திண்டுக்கல் ரெயில்வே போலீசாருக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று பார்த்தனர். இதேபோல் திண்டுக்கல் போலீஸ் துணை சூப்பிரண்டு கோகுல கிருஷ்ணன் தலைமையிலான போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
பின்னர் அந்த சாலையில் வரும் வாகனங்களை மாற்றுவழியில் போலீசார் திருப்பி விட்டனர். மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் பீதி ஏற்பட்டு பதற்றமும், பரபரப்பும் தொற்றிக்கொண்டது.
மோப்ப நாய் சோதனை
இந்த நிலையில் சம்பவ இடத்துக்கு மோப்பநாய் லீமா வரவழைக்கப்பட்டது. அது அந்த மர்ம பொருளை சுற்றிச்சுற்றி வந்து மோப்பம் பிடித்தது. ஆனால் அந்த மர்ம பொருளுக்குள் வெடி மருந்து இருப்பதை உறுதி செய்யும் எந்த சமிக்ஞையையும் மோப்பநாய் செய்யாமல் அங்கிருந்து சென்றுவிட்டது.
இதேபோல் மெட்டல் டிடெக்டர் மூலம், அந்த மர்ம பொருளை வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையிட்டனர். அதிலும் வெடிகுண்டுக்கான எச்சரிக்கை சத்தம் கேட்கவில்லை. அதன்பிறகே போலீசார் நிம்மதி அடைந்தனர்.
இதையடுத்து அந்த மர்ம பொருள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அந்த மர்ம பொருள் மீன்பிடிக்க பயன்படுத்தும் வலையில் இணைக்கப்படும் பெரிய வடிவிலான ரப்பர் பந்து என்பது தெரியவந்தது.
சமூக விரோதிகளின் ஒத்திகையா?
திண்டுக்கல் பகுதியில் உள்ள குளங்களில் மீன் பிடிப்பதற்காக கொண்டு வந்த வலையில் இருந்து அறுந்த அந்த பந்தை மர்ம நபர்கள் யாராவது சாலையோரத்தில் போட்டுச்சென்றிருக்கலாம் என்றும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த பந்தை, திண்டுக்கல் ஆயுதப்படை மைதானத்துக்கு எடுத்துச்சென்றனர்.
சாலையோரம் கிடந்த மர்ம பொருள் வெடிகுண்டு இல்லை என்றாலும் கோவை கார் குண்டு வெடிப்பு, பெங்களூருவில் குக்கர் வெடிகுண்டு வெடிப்பு சம்பவங்களை போல் திண்டுக்கல்லிலும் வெடிகுண்டு சம்பவம் நடத்த சமூக விரோதிகள் நடத்திய ஒத்திகையா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.