திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் 34 சதவீதம் சரிவு


திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் 34 சதவீதம் சரிவு
x
திருப்பூர்


திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் கடந்த 3 மாதமாக சரிவை சந்தித்துள்ள நிலையில் கடந்த மாதம் மட்டும் 34 சதவீதம் குறைந்துள்ளது.

34 சதவீதம் சரிவு

திருப்பூர் பின்னலாடை தொழில் நூல் விலை உயர்வு காரணமாக மந்தநிலையில் உள்ளது. திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் கடந்த 3 மாதங்களாக வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இது அகில இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தை விட கடந்த ஜூன் மாதம் அதிகபட்சமாக 211 சதவீதம் திருப்பூர் பின்னலாடை வர்த்தகம் அதிகரித்தது.

ஆனால் ஆகஸ்டு மாதத்துக்கு பிறகு பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் சரிவை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு (2021-22) ஆகஸ்டு மாதம் ரூ.3,177 கோடிக்கு நடந்துள்ளது. ஆனால் கடந்த ஆகஸ்டு மாதம் ரூ.2,628 கோடிக்கு நடந்துள்ளது. இது 17 சதவீதம் சரிவாகும். முந்தைய ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.3,130 கோடியாக இருந்தது. கடந்த செப்டம்பர் மாதம் ரூ.2,282 கோடியாக குறைந்துள்ளது. இது 27 சதவீதம் வீழ்ச்சியாகும். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரூ.3,290 கோடியாக இருந்த பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், கடந்த அக்டோபர் மாதம் ரூ.2,165 கோடியாக சரிந்தது. இது கடந்த ஆண்டைவிட 34 சதவீதம் குறைவாகும். இந்திய அளவில் கடந்த மாதம் 26 சதவீதம் வீழ்ச்சியடைந்து இருக்கிறது.

பணவீக்கம் அதிகரிப்பு

இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் கூறும்போது, 'நூல் விலை உயர்வு, உலக பொருளாதார மந்தநிலை காரணமாக பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் வீழ்ச்சியடைந்துள்ளது. நூல் விலை தற்போதைய நிலையில் குறைந்து வருவது சாதகமாக அமைந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வர்த்தக விசாரணை நடக்கிறது. அவை ஆர்டர்களாக மாறி பின்னலாடை ஏற்றுமதி நடந்தால் வருகிற மார்ச் மாதம் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும்.

தற்போது ஐரோப்பா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் பணவீக்கம் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்து விட்டது. அத்தியாவசிய தேவைக்கு அவர்கள் செலவு செய்கிறார்கள். ஆடைகளுக்கு செலவு செய்வதை குறைத்து இருக்கிறார்கள். இதனால் புதிய ஆர்டர் வருகை தாமதமாகி இருக்கிறது. அடுத்த 3 மாதமும் இந்த பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில் மந்தநிலை நீடிக்கும்' என்றார்.


Next Story