இங்கிலாந்துடன் வர்த்தக ஒப்பந்தம் 2 மாதத்தில் நிறைவேறும்
இங்கிலாந்துடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் 2 மாதத்தில் நிறைவேறும் என்று ஏ.இ.பி.சி. தலைவர் நரேந்தர் குமார் கோயங்கா நம்பிக்கை தெரிவித்தார்.
இங்கிலாந்து சந்தை
ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.) சார்பில் ஏற்றுமதியாளர்கள் கூட்டம் திருப்பூரில் உள்ள ஒரு ஓட்டலில் நடைபெற்றது. கூட்டத்தில் இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் பேசும்போது, 'ஆயத்த ஆடை தொழிலில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான உற்பத்தி ஊக்குவிப்பு திட்டம் (பி.எல்.ஐ.-2) திட்டத்துக்கு அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தவும், சமாதானப்படுத்தவும் அதிக முயற்சியை ஏ.இ.பி.சி. தலைவர் மேற்கொண்டு வருகிறார். ஆடைத்துறையில் நிலைத்தன்மையை கடைபிடிக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தொழில்துறையை ஒளிர செய்ததற்கு வாழ்த்துக்கள்' என்றார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் பேசும்போது, 'இங்கிலாந்துடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் விரைவில் அமைந்தால், இங்கிலாந்து சந்தையின் பங்களிப்பை 5 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயர்த்த உதவும். வட்டி சமன்படுத்தும் திட்டத்தின் நிலுவையில் உள்ள சிக்கல்களை தீர்க்க 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்த வேண்டும். ரூ.10 கோடி முதலீட்டாளர்களையும் பி.எல்.ஐ.-2 திட்டத்தின் கீழ் இணைக்க ஜவுளித்துறை அமைச்சகத்தில் தெரிவிக்க வேண்டும். 90 சதவீதம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் திருப்பூரில் கிளஸ்டரில் உள்ளன' என்றார்.
2 மாதத்தில் உறுதிசெய்யப்படும்
ஏ.இ.பி.சி. தலைவர் நரேந்தர் குமார் கோயங்கா பேசியதாவது:-
இந்த ஆண்டு பருத்தி உற்பத்தி அதிக மகசூலுடன் போதுமானதாக உள்ளது. இதன் அடிப்படையில் மூலப்பொருட்களின் விலை கண்டிப்பாக கட்டுக்குள் இருக்கும். இதற்கு முன்பும் இப்போதும் பருத்தி மற்றும் பருத்தி நூல் ஏற்றுமதியில் சிறிய கட்டுப்பாடுகளை மட்டுமே விதிக்கும்படி கூறியுள்ளோம். இங்கிலாந்துடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் இன்னும் 2 மாதங்களில் உறுதி செய்யப்படும் என்று நம்புகிறோம். ஆஸ்திரேலியாவுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டதால் மேலும் ஆர்டர்கள் வர தொடங்கியுள்ளன. இதனால் நமது நாட்டில் இருந்து ஏற்றுமதி மேலும் 50 முதல் 80 சதவீதம் அதிகரிக்கும்.
உலகில் அதிக ஆடை நுகர்வு ஆஸ்திரேலியாவில் உள்ளது. வரியில்லா வர்த்தகம் ஒப்பந்தம் மூலமாக 5 சதவீதம் வரிக்குறைப்பால் ஆஸ்திரேலியா வர்த்தகர்களுக்கு சாதகமாக உள்ளது. வங்கதேசத்தில் இருந்து பலர் இங்கிலாந்து செல்கிறார்கள். அங்கிருந்து ஆர்டர்கள் நமக்கு வருகிறது. இங்கிலாந்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானால் இந்தியாவுக்கு, குறிப்பாக திருப்பூர் பின்னலாடை தொழில் மிகவும் பயன்பெறும். அடுத்த கோடைகால ஆர்டர் பி.எல்.ஐ.-2 திட்டத்தின் கீழ் வரும் என்று நம்புகிறோம். திருப்பூரில் தொடங்கி இந்தியா முழுவதும் 6 கிளஸ்டர்கள் ஏற்படுத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் புதிய டப் திட்ட அமலாக்கத்தை கேட்டறிந்தனர். பி.எல்.ஐ.-2 திட்டத்தில் உள்ள கேள்விகளை கேட்டு தெளிவுபடுத்தினார்கள். முடிவில் ஏ.இ.பி.சி. துணை தலைவர் சுதிர் சேக்ரி நன்றி கூறினார். இந்த கூட்டத்தில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள், ஏ.இ.பி.சி. அனைத்து செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.