பெண்ணாடம் பகுதியில் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய வழக்கில் மேலும் ஒருவர் கைது
பெண்ணாடம் பகுதியில் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டாா்.
பெண்ணாடம்,
பெண்ணாடம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெண்ணாடம் அடுத்த கோனூர் கிராமத்தைச் சேர்ந்த பாலு என்பவரின் மோட்டார் கொட்டகையில் முகமூடி அணிந்தபடி இருந்தவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம், நயினார்குளத்தை சேர்ந்த செந்தில்குமார் என்கின்ற அர்ஜூன் (வயது 39), கரூர் மாவட்டம் பசுபதி பாளையம் கிராமத்தை சேர்ந்த கவுதம் வினித் (30), வடிவேல் (35), கார்த்தி (24), ராஜசேகரன் (23), தனபால் (29), திருநெல்வேலி மாவட்டம் தேவிபட்டினத்தை சேர்ந்த கார்த்திகுமார் (19), தஞ்சாவூரை சேர்ந்த ரவி என்கின்ற ரவிச்சந்திரன் (50) என்பதும், இவர்கள் பெண்ணாடம் பகுதியில் பல்வேறு இடங்களில் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீ்ட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து அர்ஜூன் உள்பட 8 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த 6 கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். மேலும் கொள்ளை கும்பலின் தலைவனாகவும் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டுவதற்கு இடம் கொடுத்த கோனூரைச் சேர்ந்த பாலு என்பவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் இறையூர் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பாலுவை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.