பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா
கோத்தகிரியில் பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
கோத்தகிரி
கோத்தகிரியில் பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
பண்ணாரி மாரியம்மன் கோவில்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கடைவீதியில் பிரசித்திபெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் குண்டம் திருவிழா மற்றும் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 31-ந் தேதி கணபதி ஹோமம் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனை தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்று வந்தன.
குண்டம் இறங்கினர்
இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் விரதமிருந்து பூ குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நேற்று காலை 7 மணிக்கு நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடங்களை தங்கள் தலையில் சுமந்தவாறு, பூ குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து குழந்தைகள் உள்பட ஏராளமான பக்தர்களும் குண்டம் இறங்கினர்.
மதியம் 12 மணிக்கு உச்சி கால பூஜை நடைபெற்றது. இதையடுத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
தேரோட்டம்
திருவிழாவையொட்டி கோவில் தேரோட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி காலை 10 மணிக்கு அபிஷேக பூஜையும், 12 மணிக்கு அலங்கார பூஜையும் நடக்கிறது. தொடர்ந்து மதியம் 1 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
மாலை 6 மணிக்கு பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள். அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீற்றிருந்து, நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. நாளை (வியாழக்கிழமை) அம்மன் குதிரை வாகனத்திலும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) சிம்ம வாகனத்திலும், வருகிற 8-ந் தேதி அம்மன் புலி வாகனத்திலும் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.