பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்


பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்
x

பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

பெரம்பலூர்

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு பன்னோக்கு மருத்துவ முகாம் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கினார். பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன் முன்னிலை வகித்தார். மருத்துவ முகாமினை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்து பேசினார். அதனைத் தொடர்ந்து முகாமில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மூக்கு கண்ணாடிகள், கர்ப்பிணிகளுக்கு மருத்துவ பெட்டகம், மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு அமைச்சர் வழங்கினார். தொடர்ந்து குன்னம் பகுதியில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.

இதையடுத்து நன்னை கிராமத்தில் முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.24 லட்சத்து 90 ஆயிரம் செலவில் நன்னை-கிளியூர் இடையே தார்சாலை அமைக்கும் பணியையும், மாநில அரசு நிதி திட்டத்தின் கீழ் ரூ.6 கோடியே 54 லட்சம் செலவில் நன்னை முதல் பரவாய் வரை தார்சாலை அமைக்கும் பணியையும், நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.5 கோடியே 70 லட்சம் செலவில் கோவிந்தராஜ பட்டினம் முதல் கைபெரம்பலூர் வரை ஆற்று பாலம் அமைக்கும் பணியையும், மாநில அரசு நிதி திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 68 லட்சம் செலவில் வீரமநல்லூர் முதல் குழுமூர் வரையிலான சாலை மேம்படுத்துதல் பணியையும் தொடங்கி வைத்தார்.

பின்னர் கீழப்பெரம்பலூர் கிராமத்தில் மாநில அரசு நிதி திட்டத்தின் கீழ் ரூ.5 கோடியே 54 லட்சம் செலவில் கீழப்பெரம்பலூர் முதல் கோழியூர் வரை தார்சாலை அமைக்கும் பணியையும், ரூ.61 லட்சம் செலவில் கீழப்பெரம்பலூர் முதல் ஆதிதிராவிடர் காலனி வரை சாலை அமைக்கும் பணியையும் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி, வேப்பூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் முத்தமிழ்செல்வி, சுகாதாரத்துறை துணை இயக்குனர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story