பண்ருட்டி தாசில்தார் ரூ.5 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்


பண்ருட்டி தாசில்தார் ரூ.5 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 15 March 2023 12:15 AM IST (Updated: 15 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பட்டா மாற்றத்துக்கு முதியவர் அலைக்கழித்த பண்ருட்டி தாசில்தார் ரூ.5 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கடலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

கடலூர்

கடலூர்:

பண்ருட்டி அருகே உள்ள சட்டமாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 70). இவர் தனது குடும்ப பூர்வீக சொத்தை அளந்து தரக்கோரியும், பட்டா பெயர் மாற்றம் செய்து தரும்படியும் கேட்டு கடந்த 3.6.2022 அன்று ஆன்லைன் மூலம் பண்ருட்டி தாசில்தார் அலுவலகத்திற்கு விண்ணப்பித்தார். அதன் பிறகு பண்ருட்டி தாலுகா அலுவலகத்திற்கு பலமுறை சென்று கேட்ட போதும், முறையான தகவல் அளிக்காமல் ராதாகிருஷ்ணனை அலைக்கழித்துள்ளனர். இதனால் ராதாகிருஷ்ணன், கடலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கை குறைதீர் ஆணைய தலைவர் கோபிநாத், உறுப்பினர்கள் பார்த்திபன், கலையரசி ஆகியோர் விசாரித்தனர். இந்த வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நேற்று அவர்கள் தீர்ப்பு கூறினர். இதில், ராதாகிருஷ்ணனுக்கு பண்ருட்டி தாசில்தார் உரிய காலத்தில் பட்டா வழங்க வேண்டும் அல்லது அந்த சொத்தில் ஏதேனும் சிவில் வழக்கு நிலுவையில் இருந்தால் அதுகுறித்த விவரத்தை தமிழ்நாடு பட்டா பாஸ்புக் சட்டம் 1983-ன் படியும், சென்னை சேப்பாக்கம் நில நிர்வாக ஆணையரின் கூடுதல் தலைமை செயலாளரால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படியும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும், பண்ருட்டி தாலுகா அலுவலகத்தின் சேவை குறைபாட்டினால் ராதாகிருஷ்ணனுக்கு ஏற்பட்ட நஷ்டம், மனஉளைச்சல் ஆகியவற்றுக்கு இழப்பீடாக ரூ.5 ஆயிரத்தை பண்ருட்டி தாசில்தார் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.


Next Story