ஆடிப்பூர விழாவுக்கான பந்தல்கால் நடும் நிகழ்ச்சி
ஆடிப்பூர விழாவுக்கான பந்தல்கால் நடும் நிகழ்ச்சி
திருவாரூர் தியாகராஜர்கோவிலில் ஆடிப்பூர விழாவுக்கான பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.
ஆடிப்பூர விழா
திருவாரூரில் உள்ள தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. பெரிய கோவில், திருமூலட்டானம், பூங்கோவில் என இக்கோவிலை அழைக்கிறார்கள்.
இங்கு மூலவராக வன்மீகநாதர் எனும் புற்றிடங்கொண்டாரும், உற்சவராக தியாகராஜரும் அருள்பாலித்து வருகிறார்கள். நீலோத்பலாம்பாள், கமலாம்பிகை ஆகிய அம்மன் சன்னதிகளும் உள்ளன. சப்த விடங்க தலங்களில் முதன்மையான தலமாகவும், பஞ்சபூத தலங்களில் பூமிக்கான தலமாகவும் திருவாரூர் தியாகராஜர் கோவில் திகழ்கிறது.
பந்தல்கால் முகூர்த்தம்
பங்குனி உத்திர திருவிழா மற்றும் திருவாதிரை திருவிழா நேரத்தில் தியாகராஜரின் பாத தரிசன நிகழ்ச்சி இக்கோவிலின் சிறப்பம்சமாகும். ஆழித்தேர், கமலாலய குளம் என பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கமலாம்பிகை அம்மனுக்கு ஆடிப்பூர விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஆடிப்பூர விழா அடுத்த மாதம் கொண்டாடப்படுகிறது.
அதை முன்னிட்டு திருவாரூர் தியாகராஜர் கோவிலில் கமலாம்பிகை அம்மனுக்கு ஆடிப்பூர விழாவுக்கான பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. இதில் கோவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை முழங்க ஆடிப்பூர விழாவுக்கான பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.