பி.ஏ.பி. வாய்க்காலில் இறுதி சுற்று தண்ணீர் திறப்பு
பி.ஏ.பி. வாய்க்காலில் இறுதி சுற்று தண்ணீர் திறப்பு
தளி
திருமூர்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி.பாசன வாய்க்காலில் இறுதி சுற்று தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பி.ஏ.பி.வாய்க்கால்
உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி அணை கட்டப்பட்டு உள்ளது. அணைக்கு வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள், ஓடைகள், மற்றும் பி.ஏ.பி. தொகுப்பு அணைகள் நீராதாரமாக உள்ளது. அதன் மூலமாக நீர்வரத்து ஏற்படுகிறது.
அதைத் தொடர்ந்து பி.ஏ.பி. பாசன திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் சுழற்சி முறையில் 4 மண்டலங்களுக்கு தண்ணீர் வினியோகம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. அத்துடன் தளி வாய்க்கால் மூலமாக ஏழு குளங்களை ஆதாரமாகக் கொண்டு பாசனம் நடைபெற்று வருகிறது.
அது தவிர பூலாங்கிணர், குடிமங்கலம், மடத்துக்குளம், உடுமலை, கணக்கம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் 3-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதில் 94 ஆயிரத்து 362 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அதைத் தொடர்ந்து விவசாயிகள் மக்காச்சோளம் உள்ளிட்ட தானியங்கள், காய்கறிகள் சாகுபடி செய்து உள்ளனர். நீர் இருப்பு மற்றும் நீர்வரத்திற்கு ஏற்றவாறு சுழற்சி முறையில் மூன்று சுற்று தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது.
இறுதி சுற்று தண்ணீர்
அதைத்தொடர்ந்து அணையில் தண்ணீர் நேற்று இறுதி சுற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அதன்படி காலை 8 மணி நிலவரப்படி 60 அடி உயரம் கொண்ட திருமூர்த்தி அணையில் 53.15 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 823 கன அடி தண்ணீர் வந்து கொண்டு உள்ளது.அணையில் இருந்து வினாடிக்கு 147 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.