பி.ஏ.பி. கால்வாய்களை பராமரிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை
பி.ஏ.பி. கால்வாய்களை பராமரிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை
தளி
பி.ஏ.பி. கால்வாய்களை பராமரிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பி.ஏ.பி. கால்வாய்
மேற்கு ெதாடர்ச்சி மலையில் பாலாற்றை தடுத்து மலை அடிவாரத்தில் திருமூர்த்திஅணை கட்டப்பட்டுள்ளது. அணைக்கு மலைக்காலங்களில் வனத்தில் உற்பத்தியாகின்ற ஆறுகள், ஓடைகளும் காண்டூர் கால்வாய் மூலமாக பி.ஏ.பி. தொகுப்பு அணைகளும் நீர்வரத்தை அளித்து வருகிறது. அதை ஆதாரமாகக் கொண்டு கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
பாசன வசதிக்கு ஏதுவாக நிலங்கள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஆண்டுக்கு இரண்டு மண்டலங்கள் வீதம் சுழற்சி முறையில் தளி வாய்க்கால், உயர்மட்ட கால்வாய், பி.ஏ.பி. பிரதான கால்வாய் உடுமலை மற்றும் பூலாங்கிணர் கால்வாய்கள் கட்டப்பட்டு உள்ளன. அதன் மூலமாக தண்ணீர் வினியோகம் நடைபெற்று வருகிறது.
தண்ணீர் திருட்டு
ஆனால் கால்வாய்களின் கரைகள் போதுமான பராமரிப்பு இல்லாததால், அவற்றின் கரைகள் சேதமடைந்தது பாசனத்திற்கு செல்கின்ற ஏராளமான தண்ணீரை வீணாகி வருகிறது.இதனால் கால்வாய் நிறைய தண்ணீர் திறந்து விடப்பட்டாலும் கடைமடைக்கு சென்று சேர்வதில்லை.
இதன் காரணமாக விவசாயிகள் சாகுபடி பணிகளை திறம்பட மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கடைமடை விவசாய நிலங்கள் பாலைவனமாகும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளது. கால்வாய்களை முறையாக முழுமையாக குறித்த காலத்தில் பராமரிக்க கோரி விவசாயிகள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் முறையாக பராமரிக்கப்படுவதில்லை.
இதனால் தண்ணீர் திறப்பின் போது அதன் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் சீரமைக்கப்பட்ட பகுதி தானாகவே கரைந்து சென்று விடுகிறது. எனவே அதிகாரிகள் கால்வாய்களை ஆரம்பம் முதல் இறுதி வரையில் முறையாக ஆய்வு செய்து அதற்கான அறிக்கை தயார் செய்து பராமரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் கால்வாயில் தண்ணீர் திருட்டு அதிகரிப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளது. எனவே அதிகாரிகள் தண்ணீர் திருட்டை தடுப்பதற்கும் முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
----