பயிற்சி நிறைவு அணிவகுப்பு நிகழ்ச்சி
காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி நிறைவு அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
கமுதி,
கோட்டைமேட்டில் உள்ள தனி ஆயுதப்படை வளாகத்தில் செயல்படுத்தி வரும் காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி நிறைவு அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இங்கு தமிழக காவல்துறை தேர்வில் தேர்ச்சி பெற்ற 258 பேருக்கும் சட்ட-ஒழுங்கு, துப்பாக்கி சுடுதல், கராத்தே, யோகா உள்ளிட்ட ஆறு மாத கால பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி முடிந்ததை அடுத்து நிறைவு அணிவகுப்பு விழா ராமநாதபுரம் சரகம் டி.ஐ.ஜி. மயில்வாகனன் தலைமையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை முன்னிலையில் நடைபெற்றது. விழாவில் பயிற்சி காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை டி.ஐ.ஜி. மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஏற்றுக்கொண்டனர். பின்னர் பயிற்சி காவலர்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பயிற்சி காலத்தில் சிறப்பாக செயல்பட்ட பயிற்சி காவலர்களுக்கு சான்றிதழ்களும், பதக்கங்களும், நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன.
பயிற்சி முடிந்த 258 காவலர்களும் நவம்பர் 13-ந் தேதி வரை காவல் நிலையத்தில் பயிற்சி பெற்ற பின்னர் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஆயுதப்படை பிரிவில் பணியாற்ற உள்ளனர். நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன், ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் மோகன், இன்ஸ்பெக்டர்கள் பாலாஜி, லட்சுமி, பயிற்சி காவலர்களின் குடும்பத்தினர், கமுதி ஆயுதப்படை காவலர் பயிற்சி பள்ளி அதிகாரிகள், காவல் பயிற்சி பள்ளி பயின்றுநர்கள் கலந்து கொண்டனர்.