மாணவர்களுடன் பெற்றோர் சாலை மறியல்
மாணவர்களுடன் பெற்றோர் சாலை மறியல்
பொங்கலூர்
வகுப்பறைக்கு வெளியில் வைத்து பாடம் நடத்தியதால் பொங்கலூர் அருகே பள்ளி மாணவர்களுடன், பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலை மறியல்
பொங்கலூர் அருகே பொல்லிகாளிபாளையம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 300 மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். தற்போது பள்ளி திறக்கப்பட்டுள்ளதால் மாணவ-மாணவிகள் அனைவரும் பள்ளிக்கு வந்தனர். ஆனால் பள்ளியில் 1 முதல் முதல் 5-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகள் படிக்கும் பள்ளி கட்டிடம் பழுது நீக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் மாணவ-மாணவிகள் அனைவரும் பள்ளியின் வளாகத்தில் மரத்தடி நிழலில் அமர வைத்து பாடம் சொல்லிக் கொடுக்கப்பட்டது.
இதுகுறித்து நேற்று பள்ளிக்கு வந்த மாணவ- மாணவிகளின் பெற்றோர் வெயில் மற்றும் புழுதிக்காற்றில் உட்கார வைத்து பாடம் நடத்துவதை கண்டித்தனர். அதே பள்ளியில் உள்ள புதிய கட்டிடத்தில் அமர வைத்து பாடம் சொல்லிக் கொடுக்குமாறு கேட்டுள்ளனர். இதுகுறித்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே நடைபெற்ற கருத்து வேறுபாட்டால் திடீரென பெற்றோர் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் திருப்பூர்-தாராபுரம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை
இந்த சாலை மறியல் போராட்டம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட கல்வி அதிகாரி (பொறுப்பு) ஆனந்தி பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பள்ளி வளாகத்தில் உள்ள புதிய கட்டிடத்தில் அமர வைத்து பாடம் நடத்தப்படும் என உறுதி அளித்தார். மேலும் விரைவில் ஏற்கனவே இருந்த பழைய கட்டிடம் பழுது நீக்கும் பணியை விரைந்து முடிக்கவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனால் சமாதானம் அடைந்த பெற்றோர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
---------