புதுக்கோட்டை அருகே அரசு பள்ளியை பெற்றோர்கள், பொதுமக்கள் முற்றுகை


புதுக்கோட்டை அருகே அரசு பள்ளியை பெற்றோர்கள், பொதுமக்கள் முற்றுகை
x

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தொடர்பாக புதுக்கோட்டை அருகே அன்னவாசல் அரசு பள்ளியை பெற்றோர்கள், பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதில் தொடர்புடைய உதவி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை

மாணவர்களை சுற்றுலா அழைத்து சென்ற...

புதுக்கோட்டை மாவட்டம், முத்துடையான்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45). இவர், அன்னவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பள்ளி நிர்வாகத்திற்கு தெரியாமல் பிளஸ்-2 படிக்கும் 5 மாணவ-மாணவிகளை சுற்றுலா அழைத்து சென்று ஒழுங்கினமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிலர் கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தனர். இந்தநிலையில் 3 நாட்களாக கல்வித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, சமூகபாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் புகாரில் சிக்கியுள்ள உதவி தலைமை ஆசிரியர் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி வந்தனர்.

போக்சோவில் ஆசிரியர் கைது

இந்நிலையில், கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சமூக அலுவலர் கோகுலப்பிரியா புகார் மனு அளித்தார். அதில், மாணவிகளை உதவி தலைமை ஆசிரியர் பாலியல் தாக்குதல் செய்ததாகவும், இதனை வெளியில் சொன்னால் செய்முறை தேர்வில் மதிப்பெண்ணை குறைத்து விடுவதாக மிரட்டியதாக புகாரில் தெரிவித்து இருந்தார். அதன் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து உதவி தலைமை ஆசிரியர் ரமேசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

முற்றுகை

இந்த நிலையில் இன்று 100-க்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள் அரசு பள்ளியை முற்றுகையிட்டனர். இதையடுத்து அங்கு அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், மாவட்ட கல்வி அலுவலர் ரமேஷ், பள்ளி துணை ஆய்வாளர் குரு மாரிமுத்து உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பெற்றோர்கள், பொதுமக்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி வளர்ச்சிகுழு நிர்வாகிகள் ஆகியோரிடம் இரண்டு கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

பரபரப்பு

அப்போது அவர்கள் அனைத்து ஆசிரியர்களையும் பணி மாற்றம் செய்ய வேண்டும். செய்முறை தேர்வு மதிப்பெண்களை தலைமை ஆசிரியரே வழங்க வேண்டும். மாதம் ஒருமுறை பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தை கூட்ட வேண்டும். பள்ளியில் அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும். பள்ளி முழுவதிலும் கண்காணிப்பு கேமரா வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். பள்ளியை மாணவர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள் ஆகியோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பணியிடை நீக்கம்

போக்சோவில் அன்னவாசல் அரசு மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ் கைதானதை தொடர்ந்து அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரை பணியிடை நீக்கம் செய்து பள்ளிக்கல்வி துறை இணை இயக்குனர் (மேல்நிலை கல்வி) ராமசாமி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு சென்னையில் இருந்து நேற்று மதியம் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் வந்தது. மேலும் அதன் நகல் அன்னவாசல் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கும், உதவி தலைமை ஆசிரியர் ரமேசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மணிவண்ணனிடம் கேட்ட போது, கைதான உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்தார்.


Next Story