தனியார் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்


தனியார் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்
x

மாணவிகளை தொடர்ந்து படிக்க அனுமதிக்கக்கோரி தனியார் பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டனர்.

வேலூர்

வேலூர் அண்ணாசாலை ரவுண்டானா கஸ்பா பகுதியில் தனியார் மகளிர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படித்த மாணவிகள் சிலரை 6-ம் வகுப்பிலும், 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகள் சிலரை 9-ம் வகுப்பில் சேர்க்கவில்லை என்றும், மாணவிகளின் பெற்றோரிடம் டி.சி. வாங்கி சென்று வேறு பள்ளியில் சேர்க்கும்படி பள்ளி நிர்வாகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அதையடுத்து மாணவிகளின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் இதுதொடர்பாக கேட்டதற்கு மாணவிகள் சரியாக படிக்கவில்லை. அதனால் வேறு பள்ளியில் சேர்க்கும்படி கூறி உள்ளனர். அதனால் அதிருப்தி அடைந்த மாணவிகளின் பெற்றோர் நேற்று திடீரென தனியார் பள்ளியை முற்றுகையிட்டனர். சரியான காரணம் இல்லாமல் மாணவிகளை பள்ளியில் இருந்து வெளியே அனுப்புவதாகவும், புதிதாக அந்த இடத்தில் அதிக கட்டணத்தில் மாணவிகளை சேர்ப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

இதுகுறித்து தகவலறிந்த வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் அங்குலட்சுமி அங்கு சென்று மாணவிகளின் பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத்தொடர்ந்து பள்ளி நிர்வாகம் ஏற்கனவே படித்த மாணவிகளை வெளியே அனுப்புவதில்லை என்று உறுதியளித்தது. அதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story