அரசு பள்ளி ஆய்வக கட்டிடத்தை இடிக்க பெற்றோர் எதிர்ப்பு
அரசு பள்ளி ஆய்வக கட்டிடத்தை இடிக்க பெற்றோர் எதிர்ப்பு
தக்கலை:
பத்மநாபபுரத்தில் கல்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் பிளஸ்-2 மாணவர்களுக்கான இயற்பியல் ஆய்வக கட்டிடம் பள்ளி வளாகத்தில் உள்ளது. 1974-ல் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தை இடித்து அகற்ற பொதுப்பணித்துறை நடவடிக்கை மேற்கொண்டது இதனையடுத்து கடந்த மாதம் 24-ல் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் ஒப்பந்ததாரர் மூலம் கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்துவதற்கான ஏல தேதி மே மாதம் 18-ந் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று காலை தக்கலை பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சண்முகபிரியா மற்றும் ஊழியர்கள் ஏலம் விடுவதற்காக பள்ளிக்கு வந்தனர். அது போல் பல ஒப்பந்ததாரர்களும் ஏலம் எடுக்க வந்திருந்தினர். இதனை அறிந்த பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டு கட்டிடத்தை இடிக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பெற்றோர் தரப்பில் ஆய்வக கட்டிடம் நன்றாகத் தான் உள்ளது. இதனை இடிக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படி நீங்கள் இடிப்பதாக இருந்தால் புதிய ஆய்வகம் கட்டிய பிறகு இடியுங்கள் என கூறினர்.
இதற்கு அதிகாரிகள் தரப்பில் புதிய ஆய்வகம் கண்டிப்பாக கட்டி தரப்படும். இப்போது இருக்கும் கட்டிடம் பழமையானதால் தான் இதனை இடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஆகவே தான் ஏலமிட வந்திருக்கிறோம் என கூறியதை ஏற்றுக்கொள்ளாத பொதுமக்கள் ஏற்கனவே மாற்று நிரந்தர கட்டிடம் கட்டாமல் இடிக்கப்பட்ட தொடக்கப் பள்ளிக்கு ஒரு வருடம் கழித்து தான் கட்டிடம் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுவும் நாங்கள் போராடியதால் தான் நடந்திருக்கிறது. அதே போல் இதுவும் ஆகக்கூடாது என்பதற்காகத்தான் இதை எதிர்க்கிறோம். ஜூன் மாதம் பள்ளி திறக்கிறது. அதற்குள் ஆய்வகம் எப்படி கட்ட முடியும். ஆகவே புதிதாக ஆய்வகம் ஏற்படுத்திய பிறகு இடிக்கலாம். அதுவரை இடிப்பதற்கான ஏலம் விடக் கூடாது என கூறினர். இதனையடுத்து புகாராக எழுதி தாருங்கள் என அதிகாரிகள் தரப்பில் கூறியதையடுத்து பெற்றோர், பொதுமக்கள் கையெழுத்திட்ட புகார் மனுவை பள்ளி மேலாண்மை திட்டக் குழு உறுப்பினர்கள் வினோத்குமார், ஷீபா, நாகராஜன், செந்தில்குமார் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுரேஷ், ஜோதீந்திரன் ஆகியோர் உதவி பொறியாளர் சண்முகபிரியாவிடம் வழங்கினர். இதனையடுத்து கட்டிடத்தை இடிப்பதற்கான ஏலம் விடுவதை ரத்து செய்து விட்டு பொதுப்பணித்துறையினர் சென்றனர்.