கொத்தமங்கலத்தில் பழுதடைந்த கட்டிடத்தை இடிக்கக்கோரி மாணவர்களுடன் பெற்றோர்கள் காத்திருப்பு போராட்டம்
கொத்தமங்கலத்தில் பழுதடைந்த கட்டிடத்தை இடிக்கக்கோரி மாணவர்களுடன் பெற்றோர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காத்திருப்பு போராட்டம்
கீரமங்கலம் அருகே உள்ள கொத்தமங்கலம் மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். இப்பள்ளி வளாகத்தில் 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஓட்டு கட்டிடம் மிகவும் சேதம் அடைந்து உள்ளதால் மாணவர்களை வேறு கட்டிடத்திலும், மரத்தடியிலும் வைத்து ஆசிரியர்கள் பாடங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது அடிக்கடி மழை பெய்து வருவதால் பழுதடைந்த கட்டிடத்தை இடிக்கும் வரை மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளி முன்பு ஒரு மரத்தடியில் அமர வைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த திருவரங்குளம் வட்டார கல்வி அலுவலர் கருணாகரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கட்டிடம் இடிக்க ஒப்பந்தம் எடுத்திருந்த ஒப்பந்ததாரர் பள்ளி விடுமுறை நாளான நாளை (இன்று) கட்டிடத்தை இடிப்பதாக கூறினார். இதில், சமாதானம் அடைந்த பெற்றோர் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப சம்மதம் தெரிவித்தனர். மேலும் அதே பள்ளி வளாகத்தில் ஆபத்தான நிலையில் உள்ள சமையல் கூடத்தை அகற்றவும், சுற்றுச்சுவர் அமைக்கவும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, வட்டார கல்வி அலுவலர் மற்றும் ஆசிரியைகள் மாணவ- மாணவிகளை வகுப்புகளுக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.