பிள்ளைகளின் நடவடிக்கைகளை பெற்றோர் கண்காணிக்க வேண்டும்


பிள்ளைகளின் நடவடிக்கைகளை பெற்றோர் கண்காணிக்க வேண்டும்
x

பிள்ளைகளின் நடவடிக்கைகளை பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என்று தொரப்பாடியில் நடந்த பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில் வேலுர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறினார்.

பிள்ளைகளின் நடவடிக்கைகளை பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என்று தொரப்பாடியில் நடந்த பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில் வேலுர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறினார்.

பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்

வேலூர் தொரப்பாடி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் சைமன் வரவேற்றார்.

கூட்டத்துக்கு வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி பேசியதாவது:-

கண்காணிக்க வேண்டும்

மாணவர்களின் கல்வி நலனுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் மூலம் மாணவர்களின் எதிர்காலம் நன்றாக அமைய வேண்டும் என்பதே அரசின் நோக்கம். மாணவர்கள் ஒழுக்கத்தில் கவனம் செலுத்தி படிக்க வேண்டும். பள்ளிக்கு வரும்போது உங்கள் புறத்தோற்றத்தை நல்ல முறையில் வைத்து கொள்ள வேண்டும்.

பொற்றோர் தங்கள் பிள்ளைகளின் தலைமுடி, சீருடை ஒழுங்காக உள்ளதா என்று கவனம் செலுத்துவதுடன், அவர்கள் நல்ல நண்பர்களுடன் பழகுகிறார்களா?, அவர்களின் பழக்க வழக்கங்கள் என்ன என்பதை கண்காணிக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் போதைப்பொருள் போன்ற தீய பழக்க வழக்கங்கள் இல்லாமல் இருக்க முடியும். பெற்றோர்கள் மாதந்தோறும் பள்ளி ஆசிரியர்களை சந்தித்து பேசுங்கள். பள்ளி மேலாண்மைக்குழு அடிக்கடி கூடி பள்ளிக்கு தேவையான அனைத்தையும் என்னிடம் கேட்டு பெறலாம். அதற்கு மாவட்ட நிர்வாகம் உதவி செய்யும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து பள்ளி மேலாண்மைக்குழு, பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பெற்றோர்கள் பல்வேறு கருத்துகள் தெரிவித்தனர். அதற்கு முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி பதில் அளித்தார். அதையடுத்து பள்ளி மேலாண்மைக்குழு தலைவர், துணைத்தலைவர், நிர்வாகிகளுக்கு கலெக்டர் சான்று வழங்கினார்.

கூட்டத்தில், பெற்றோர், ஆசிரியர் கழக உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story