குழந்தைகளின் நடவடிக்கைகளை பெற்றோர் கண்காணிக்க வேண்டும்
குழந்தைகளின் நடவடிக்கைகளை பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என்றும் கலெக்டர் அரவிந்த் கூறினார்.
நாகர்கோவில்:
குழந்தைகளின் நடவடிக்கைகளை பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என்றும் கலெக்டர் அரவிந்த் கூறினார்.
நலத்திட்ட உதவிகள்
குமரி மாவட்ட வருவாய் துறை சார்பில் கல்குளம் தாலுகா இரணியல் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கு மட்டும் 2-ம் கட்ட மனு நீதி திட்ட நிறைவு நாள் நிகழ்ச்சி இரணியல் அரசு நடுநிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அரவிந்த் பங்கேற்று பொதுமக்களின் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அதன் பின்னர் அவர் பேசியதாவது:-
குமரி மாவட்டத்தை பசுமை மற்றும் குப்பையில்லா மாவட்டமாக மாற்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாக நடைபெற்று வருகிறது. மேலும், சமூக நலத்துறையின் சார்பில் போதைப்பொருள் தடுப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
கண்காணிக்க வேண்டும்
பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளின் நடவடிக்கைகளை பெற்றோர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இந்த மனுநீதி திட்ட நிறைவு நாள் நிகழ்ச்சியில் 20-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு குறித்த மனுக்கள் வந்துள்ளது. கடந்த வாரம் அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் தொழில்நுட்பத்துறையில் வேலைவாய்ப்பினை உருவாக்கிடும் வகையில் படித்த மாணவ-மாணவிகளுக்கென தொழில்நுட்ப பயிற்சி முகாம் தொடங்கப்பட்டது.
எளிதாக இருக்கும்
இம்முகாமில் மாணவர்கள் கலந்து கொண்டு, பயிற்சி பெற்றால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற எளிதாக இருக்கும். வீட்டு வசதி வாரியத்தின் மூலம் தகுதியான நபர்களுக்கு வீடுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் அனைவரும் அரசால் வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகள் குறித்து தெரிந்து பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலர்மேல் மங்கை, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ஷீலா ஜாண், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வாணி, கல்குளம் தாசில்தார் வினோத், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.