குழந்தைகளின் நடவடிக்கையை பெற்றோர் கண்காணிக்க வேண்டும்
குழந்தைகளின் நடவடிக்கையை பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என்று சிறப்பு மக்கள் தொடர்பு முகாமில் கலெக்டர் அரவிந்த் கூறினார்.
நாகர்கோவில்:
குழந்தைகளின் நடவடிக்கையை பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என்று சிறப்பு மக்கள் தொடர்பு முகாமில் கலெக்டர் அரவிந்த் கூறினார்.
மக்கள் தொடர்பு முகாம்
அகஸ்தீஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இரண்டாம் கட்ட சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. முகாமில் கலெக்டர் அரவிந்த் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.
பின்னர் நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர் பேசியபோது கூறியதாவது:-
கண்காணிக்க வேண்டும்
பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். முகாமில் 25 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, ஊனமுற்றோர் உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்டோர் சான்று, பட்டாவில் பெயர் திருத்தம், பட்டா பெயர் மாற்றம், தனிப்பட்டா, பட்டாவில் பெயர் சேர்த்தல், வகுப்பு சான்று, ஆதரவற்ற விதவை சான்று வழங்கப்பட்டுள்ளது.
தோட்டக்கலைத்துறை சார்பில் ஒரு பயனாளிகளுக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் காளான் வளர்ப்பு குடில் பணி ஆணை, 2 பயனாளிகளுக்கு பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் பனை மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களுக்கான கூடம் அமைத்தல், வேளாண்மைத்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு உளுந்து சாகுபடி (2 கி.கி), ரைசோபியம், டிரைகோ டெர்மா விரிடி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கண்காட்சி
இதைத் தொடர்ந்து அகஸ்தீஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அரசின் திட்டங்கள் குறித்த விவரங்கள் வைக்கப்பட்டு இருந்ததையும், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு கண்காட்சியினையும் கலெக்டர் அரவிந்த் பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் நாகர்கோவில் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், தனித்துணை கலெக்டர் திருப்பதி, ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் நாகராஜன், மாவட்ட சமூக நல அலுவலர் சரோஜினி, அகஸ்தீஸ்வரம் தாசில்தார் ராஜேஷ், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி தலைவர் அன்பரசி, வார்டு உறுப்பினர்கள் ஆதிலிங்க பெருமாள், பிரேமானந்த், செயல் அலுவலர் மாலதி, அகஸ்தீஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ராமசந்திரன், அகஸ்தீஸ்வரம் வட்டார மருத்துவ ஆலோசனை குழு உறுப்பினர் பாபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.