பெற்றோர் தங்களுடைய எண்ணங்களை குழந்தைகள் மீது திணிக்கக்கூடாது- இறையன்பு
பெற்றோர் தங்களுடைய எண்ணங்களை குழந்தைகள் மீது திணிக்க கூடாது என்று முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு கூறினார்.
பெற்றோர் தங்களுடைய எண்ணங்களை குழந்தைகள் மீது திணிக்க கூடாது என்று முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு கூறினார்.
போதை எதிர்ப்பு விழிப்புணர்வு இயக்கம்
நாகை அருகே அக்கரைப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு இயக்க தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு தலைமை தாங்கினார்.
மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் இறையன்பு பேசியதாவது:-
போதைப்பொருள் விழிப்புணர்வு இயக்கத்தை நாகையில் இருந்து தொடங்குவதற்கு காரணம், எனது பணியை நாகையில் இருந்து தான் தொடங்கினேன்.
சமுதாயத்தை பாதிக்கிறது
போதைப்பழக்கம் தனி மனிதனை மட்டுமல்லது, சமுதாயத்தையும் பாதிக்கிறது. போதைப்பழக்கத்தால் வாழ்க்கையில் உள்ள அனைத்தையும் இழக்க நேரிட்டு, துயரம் மட்டுமே மீதி இருக்கும். பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியர்களின் சொல்லை கேட்பதைவிட, சக மாணவர்களின் சொல்லை தான் கேட்கிறார்கள்.
தீயது எனத்தெரிந்தும் நண்பர்கள் போதை பழக்கத்தை கையாளும்போது, மற்றவர்களுக்கும் அந்த பழக்கத்தை கையாள்வதற்கு வாய்ப்பு கிடைக்கிறது. போதைப்பொருளை ஒருமுறை தொட்டால் தொடர்ந்து அதை பயன்படுத்த தொடங்கி விடுவார்கள். ஒரு சிலர் மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வருவதற்கு போதைப்பொருட்களை பயன்படுத்துகின்றனர்.
திணிக்க கூடாது
ஒரு போதும் மன அழுத்தத்தில் இருந்து வெளியேற மது போன்ற போதைப்பொருட்கள் உதவாது. குழந்தைகளை, பெற்றோர்கள் முதலீடாக பார்க்கிறார்கள். பெற்றோர் தங்களின் எண்ணங்களை குழந்தைகள் மீது திணிக்கக்கூடாது. வீடுகளை கூண்டாக மாற்றாமல், பூங்காவாக மாற்ற வேண்டும்.
போதைப்பொருட்களால் மாணவர்களுக்கு ஞாபக சக்தி குறைந்து விடும். எனவே மாணவர்கள் போதைப்பழக்கத்தில் இருந்து விலகி நிற்க வேண்டும். மகத்தான எழுச்சி பெற்ற இளைஞர்கள் கூட்டம் உருவாக வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.