தேசிய நெடுஞ்சாலையில் பாலம் அமைக்கக்கோரி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர் போராட்டம்


தேசிய நெடுஞ்சாலையில் பாலம் அமைக்கக்கோரி  குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல்   பெற்றோர் போராட்டம்
x

தேசிய நெடுஞ்சாலையில் பாலம் அமைக்கக்கோரி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் சங்ககிரி உதவி கலெக்டர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்.

சேலம்

சங்ககிரி,

போராட்டம்

சங்ககிரி அருகே உள்ள ஐவேலி ஊராட்சி அக்கமாபேட்டை ஆதிதிராவிடர் தெரு மற்றும் அருந்ததியர் தெருவில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அக்கம்மாபேட்டை அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளியில் படித்து வருகிறார்கள். பள்ளிகளுக்கு செல்ல அவர்கள் ஓமலூர்-திருச்செங்கோடு தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல வேண்டும். தற்போது அங்கு சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் சாலையை கடக்க வசதியாக தேசிய நெடுஞ்சாலையில் பாலம் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்தநிலையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் தங்களது குழந்தைகளை கடந்த 5-ந் தேதி முதல் பள்ளிகளுக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சமாதான பேச்சுவார்த்தை

இதையடுத்து நேற்று சங்ககிரி உதவி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. உதவி கலெக்டர் சவுமியா, பாலம் அமைக்க வேண்டிய பகுதி தனியாருக்கு சொந்தமான நிலத்தில் உள்ளது. அதை ஊராட்சிக்கு தானமாக பெற்று, பின்னர் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதில் சமாதானம் அடைந்து பொதுமக்கள், தங்களது குழந்தைகளை நாளை (திங்கட்கிழமை) முதல் பள்ளிக்கு அனுப்புவதாக உறுதி அளித்தனர்.

இந்த பேச்சுவார்த்தையின்போது, சங்ககிரி தாசில்தார் பானுமதி, சேலம் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சாருகேசன், உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோவிந்தராஜ், மண்டல துணை தாசில்தார் ஜெயக்குமார், வருவாய் ஆய்வாளர் ராஜீ ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story