திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பரிகார பூஜைகள் நிறைவு
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் வருகிற 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி நடந்து வந்த பரிகார பூஜைகள் நேற்றுடன் நிறைவடைந்தது.
திருவட்டார்,
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் வருகிற 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி நடந்து வந்த பரிகார பூஜைகள் நேற்றுடன் நிறைவடைந்தது.
கும்பாபிஷேகம்
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 6-ந்தேதி நடைபெற உள்ளது.
இதையொட்டி கோவில் வளாகம், திருவட்டார், காங்கரை, சந்தை உள்பட பல்வேறு இடங்களில் அலங்கார விளக்குகள் பொருத்தும் பணிகள் நடந்து வருகிறது. வருகிற 29-ந்தேதி கும்பாபிஷேக பூஜைகள் தொடங்குகிறது. 30-ந்தேதி பாலாலயத்தில் பூஜையில் இருக்கும் அர்ச்சனா மூர்த்தி விக்கிரகங்கள் ஒற்றைக்கல் மண்டபத்துக்கு ஏழு ஆண்டுகளுக்குப்பின்னர் எடுத்துச் செல்லப்படுகிறது. தொடர்ந்து அங்கு பூஜைகள் நடைபெறும்.
அடுத்த மாதம் (ஜூலை) 6-ந்தேதி காலை 6 மணி முதல் 6.50 மணிக்குள் மகாகும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
பரிகார பூஜைகள் நிறைவு
கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி பல்வேறு பரிகார பூஜைகள் கடந்த 9 மாதங்களாக நடந்து வந்தது.
கடைசி பரிகார பூஜையான சுகிர்த ஹோமம் நேற்று காலை முதல் மதியம் வரை கோவில் தந்திரி சஜித் சங்கரநாராயணரு தலைமையில் நடந்தது. இதில் கே.கே.எம்.குழும தொழில் அதிபர் சிதறால் எஸ்.ராஜேந்திரன், மாவட்ட மின்வாரிய சூப்பிரண்டிங் என்ஜினீயர் பத்மகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இத்துடன் பரிகார பூஜைகள் நிறைவடைந்தது.