ஈரோட்டில் இருக்கும் ஒரே பொழுதுபோக்கு தலம்: புதர்மண்டி கிடக்கும் வ.உ.சி. பூங்கா- சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?


ஈரோட்டில் இருக்கும் ஒரே பொழுதுபோக்கு தலம்: புதர்மண்டி கிடக்கும் வ.உ.சி. பூங்கா- சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஈரோடு


ஈரோட்டில் இருக்கும் ஒரே பொழுதுபோக்கு தலமாக விளங்கும் வ.உ.சி. பூங்கா புதர்மண்டி கிடக்கிறது. இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.

பொழுதுபோக்கு பூங்கா

ஈரோடு மாநகரின் மத்தியில் வ.உ.சி. பூங்கா உள்ளது. இந்த பூங்கா பல்வேறு வரலாற்று சிறப்புகளை பெற்றது. முதன் முறையாக குழாய் மூலம் வீதிகளுக்கு தண்ணீர் இணைப்பு வழங்குவதற்காக கட்டப்பட்ட மாநகராட்சி தண்ணீர் தொட்டி செங்கோட்டை வடிவில் இங்கு அமைந்து உள்ளது. மக்கள் பூங்கா என்று அழைக்கப்பட்ட இந்த பூங்கா சுதந்திர போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் பெயரில் இயங்கி வருகிறது.

ஈரோடு மாநகரில் பொதுமக்களுக்கு ஒரே பொழுதுபோக்கு தலமாக இது இருந்தது. பூங்காவையொட்டி வ.உ.சி.பூங்கா விளையாட்டு மைதானம், பொருட்காட்சி மைதானம் ஆகியவை உள்ளன. பொருட்காட்சி மைதானம் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிக காய்கறி சந்தையாக இயங்கி வருகிறது. இதனால் பொருட்காட்சி, கண்காட்சி ஆகியவை நடத்த முடியாத சூழல் உள்ளது.

சீரமைப்பு

இதற்கிடையே 5 ஆண்டுகளுக்கு முன்பே வ.உ.சி.பூங்கா சீரமைப்பு பணிகள் தொடங்கின. இதற்காக ரூ.4 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதில் சிறுவர் பூங்கா மட்டும் ஓரளவு பணிகள் முடிந்து 2 ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டது. அதற்கு பின்னர் பூங்காவில் எந்த ஒரு பணியும் நடைபெறவில்லை. இப்போது பூங்கா புதர் மண்டிக்கிடக்கிறது. படிகள், கட்டுமானங்கள் சிதிலம் அடைந்து உள்ளன. அலங்கார நீரூற்றுகளில் புல், செடிகள் வளர்ந்து காடுபோன்று கிடக்கிறது.

இங்கு பொழுதுபோக்க வருபவர்கள் பார்த்தாலே அலறி ஓடும் நிலையில் இருக்கிறது. பாம்புகளின் நடமாட்டம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் சமூக விரோத செயல்களின் கூடாரமாக வ.உ.சி.பூங்கா மாறி வருகிறது. காதல் ஜோடிகள் தனியாக சென்று ஒதுங்கும் இடமாக இது உள்ளது.

சமூக விரோத செயல்கள்

இதுதொடர்பாக பல கோரிக்கைகள் வைக்கப்பட்டாலும் ஈரோடு மாநகராட்சி நிர்வாகமும், அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் வ.உ.சி.பூங்காவை கண்டுகொள்ளாமல் இருக்கிறது. பூங்காவுக்கு செல்லும் சாலையில் சோதனை சாவடி போன்று ஒரு தடுப்பு வேலி அமைக்கப்பட்டு இருக்கிறது. இது அங்குள்ள அரசு அருங்காட்சியகம் செல்பவர்களுக்கும் தடுப்பு வேலியாக உள்ளது. சிறுவர் பூங்கா பகுதிக்கு செல்ல முடியாத அளவுக்கு சாலை கரடு முரடாக இருக்கிறது. 4 ஆண்டுகளுக்கு முன்பு சுவஸ்திக் கார்னர் பகுதியில் இருந்து திருநகர்காலனி ரோட்டுக்கு செல்பவர்கள் வ.உ.சி.பூங்கா ரோடு வழியாக சென்று வந்தனர். அதிகாலை முதல் இரவு 9 மணி வரை கதவுகள் திறந்து இருக்கும். ஆனால், சீரமைப்பு பணி என்ற பெயரில் அடைக்கப்பட்ட கதவுகள் இதுவரை திறக்கப்படாததாலும், 2 சக்கர வாகனங்கள் செல்வதற்கு கூட வசதி இல்லாததால் மக்கள் நடமாட்டம் இங்கு இல்லாத நிலை உள்ளது. எனவே சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மட்டுமே தங்கள் புகலிடமாக வ.உ.சி.பூங்காவை மாற்றி வைத்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து இருக்கிறார்கள்.

மக்கள் நடமாட்டம் குறைந்ததால் வ.உ.சி. பூங்கா மரங்களில் வவ்வால்கள் பெருகிக்கிடக்கிறது. நகரின் நடுவில் ஒரு வனம் என்பது நல்ல விஷயம்தான். அந்த வனம் மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் சிறந்த சுற்றுச்சூழல் அளிக்கும் பூங்காவாக மாற வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். அந்த விருப்பத்தை ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்பது கோரிக்கையாகும்.


Next Story