ஜெயிலில் இருந்து பரோலில் வந்து 4 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த ஆயுள்தண்டனை கைதி சிக்கினார்


ஜெயிலில் இருந்து பரோலில் வந்து 4 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த ஆயுள்தண்டனை கைதி சிக்கினார்
x
தினத்தந்தி 20 Sept 2023 12:15 AM IST (Updated: 20 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஜெயிலில் இருந்து பரோலில் வந்து 4 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த ஆயுள்தண்டனை கைதி சிக்கினார்.

தூத்துக்குடி

ஜெயலில் இருந்து பரோலில் வந்து 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை கைதியை போலீசார் கைது செய்தனர்.

ஆயுள் தண்டனை

தூத்துக்குடி அருகே உள்ள ஓட்டப்பிடாரம் கச்சேரி தளவாய்புரத்தைச் சேர்ந்த சாமி மகன் சண்முகையா (வயது 57). இவர் கடந்த 1985-ம் ஆண்டு தூத்துக்குடியில் காளியப்ப பிள்ளை என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் இந்த வழக்கில் 1990-ம் ஆண்டு சண்முகையாவுக்கு தூத்துக்குடி கூடுதல் அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தது. இதனை எதிர்த்து அவர் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அங்கும் அவரது தண்டைனையை ஐகோர்ட்டு உறுதி செய்தது. இதனால் அவர் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில், 21 ஆண்டுகளாக ஜெயிலில் இருந்த சண்முகையா, தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லையென்று கடந்த 15.1.19 முதல் 20.1.19 வரை 6 நாட்கள் பரோலில் வெளியே வந்தவர், மீண்டும் சிறை செல்லாமல் தலைமறைவாகிவிட்டார்.

இதுகுறித்து பாளையங்கோட்டை மத்திய சிறை அலுவலர் தர்மலிங்கம் அளித்த புகாரின் பேரில் ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கைதி சண்முகையாவை தேடி வந்தனர்.

கைது

இந்த நிலையில் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு லோகேசுவரன் மேற்பார்வையில், ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன், சப்-இன்ஸ்பெக்ட்ர் சுந்தரம் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, சண்முகையாவை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். பரோலில் வந்து 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை கைதி சண்முகையாவை கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.


Next Story