பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்


பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்
x

பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.

நீலகிரி

ஊட்டி

பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.

பகுதி நேர ஆசிரியர்கள்

தமிழகத்தில் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் தொகுப்பூதியத்தில் பகுதி நேர சிறப்பாசிரியர்களாக 10 ஆயிரத்தும் மேற்பட்டோரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலங்களில் பதிவு செய்த மூப்பு மற்றும் இன சுழற்சி அடிப்படையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமையிலான குழுவினர் தேர்வு செய்தனர். அவர்களை அரசு பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஓவியம், இசை, தையல், உடற்கல்வி போன்ற சிறப்பு பாடங்களை நடத்த பணியமர்த்தப்பட்டனர். முதலில் சட்டமன்ற பேரவை 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பின்படி 16 ஆயிரத்து 549 பகுதி நேர சிறப்பாசிரியர்களின் மாத தொகுப்பூதியம் ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது. பின்னர் படிப்படியாக உயர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ரூ.10 ஆயிரம் மாத தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது.

பணி நிரந்தரம்

இதற்கிடையில் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று தி.மு.க. தேர்தல் வாக்குறுதி அளித்தது. ஆனால் இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.

எனவே அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 100 மாணவர்களுக்கு மேல் உள்ள பள்ளிகளில் மட்டுமே சிறப்பாசிரியர்கள் நியமனம் என்ற விதியை தளர்த்தி தலா ஒரு சிறப்பாசிரியர் என்ற வீதத்தில் பணியமர்த்தி பகுதி நேர சிறப்பாசிரியர்களை உடனடியாக சிறப்பு காலமுறை ஊதியத்திற்கு கொண்டு வர வேண்டும். இதை நடப்பு கல்வியாண்டில் அமல்படுத்த வேண்டும். அனைத்து வேலை நாட்களிலும் பணி வழங்க வேண்டும்.

மேலும் கடந்த 2003-ம் ஆண்டு ஜூலை மாதம் தமிழ்நாடு அரசு ஊழியர்களின் போராட்டத்தின்போது ரூ.4 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள், அதன்பிறகு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் சிறப்பு தேர்வு நடத்தி பணி நிரந்தரம் செய்யப்பட்டதை போன்று, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சிறப்பு தேர்வு நடத்தி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி நீலகிரி மாவட்ட சிறப்பாசிரியர்கள், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.


Next Story