பார்த்தீனியம் செடிகளை கட்டுப்படுத்த வேண்டும்
வனவிலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதால், பார்த்தீனியம் செடிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கூடலூர்
வனவிலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதால், பார்த்தீனியம் செடிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பார்த்தீனியம் செடிகள்
கூடலூர், முதுமலை, நடுவட்டம், பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கோடை காலத்தில் வறட்சியின் தாக்கமாக புல்வெளிகள் கருகியது. ஆனால், மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளின் உடல்நலனையும் பாதிக்கக்கூடிய பார்த்தீனியம் செடிகள் செழித்து வளர்ந்து காணப்பட்டது. தற்போது அடிக்கடி மழையும் பெய்து வருவதால் எங்கு பார்த்தாலும் பார்த்தீனியம் செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் மண்ணின் வளம் நச்சுத்தன்மை அடைய வாய்ப்பு உள்ளது. இதுதவிர விளைநிலங்கள் பாதிக்கும் நிலை இருக்கிறது. மேலும் பார்த்தீனியம் செடிகளின் பூக்கள் காற்றில் பரவி வருவதால், வனப்பகுதியிலும் இந்த செடிகள் பரவ வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் பசுந்தீவனங்களின் வளர்ச்சி குறையும் அபாயம் உள்ளது. தொடர்ந்து வனவிலங்குகளுக்கும் உணவு தட்டுப்பாடு ஏற்படும் நிலை காணப்படுகிறது.
கட்டுப்படுத்த வேண்டும்
இவ்வாறு அனைத்து தரப்பினருக்கும் கேடு விளைவிக்கக்கூடிய பார்த்தீனியம் செடிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்பார்த்து உள்ளனர். இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது:- ஆச்டெரேசியா வகையை சேர்ந்த பூந்தாவரமாக பார்த்தீனியம் உள்ளது. வட அமெரிக்காவை பூர்வீகமாக கொண்டது. காற்றில் பூக்கள் பரவி விளைநிலங்கள் மற்றும் நிலப்பரப்புகளில் முளைத்து விடுகிறது. இந்த செடிகள் மனிதர்களுக்கு சுவாசக் கோளாறுகளையும், விலங்குகளுக்கு சரும நோய்களையும் உண்டாக்குகிறது. பார்த்தீனியம் செடிகளால் நன்மையை விட தீமையே அதிகம். இது தவிர விளைநிலங்களையும், வளிமண்டலத்தையும் மாசுபடுத்துகிறது. இச்செடிகளை வேருடன் பிடுங்கி கல் உப்பு, சோப்பு நீர் கரைசல் மூலம் தெளிக்க வேண்டும். பின்னர் காய்ந்த பிறகு தீயிட்டு எரிக்க வேண்டும். தொடர்ந்து ஆவாரம்பூ செடிகளை நடுவதன் மூலம் பார்த்தீனியம் செடிகளை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.