தூத்துக்குடியில் போலீஸ் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற931 பேருக்கு உடல் தகுதி தேர்வு தொடங்கியது
தூத்துக்குடியில் போலீஸ் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற 931 பேருக்கு உடல் தகுதி தேர்வு திங்கட்கிழமை தொடங்கியது. தொடர்ந்து செவ்வாய்க்கிழமை முதல் இரண்டு நாட்கள் நடக்கிறது.
தூத்துக்குடியில் போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற 931 பேருக்கான உடல் தகுதி தேர்வு நேற்று தொடங்கியது. இன்றும்(செவ்வாய்க்கிழமை), நாளையும்(புதன்கிழமை) தொடர்ந்து நடைபெற உள்ளது.
உடல் தகுதி தேர்வு
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் போலீஸ்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறையில் இரண்டாம் நிலை காவலர் பதவிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். கடந்த 2022-ம் ஆண்டு காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக கடந்த 27.11.22 அன்று எழுத்து தேர்வு நடந்தது. இதில் தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த 931 விண்ணப்பதாரர்கள் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கான உடல் தகுதி தேர்வு தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. இந்த தேர்வுக்கு தமிழக ரெயில்வே டி.ஐ.ஜி பி.விஜயகுமார், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
400 பேர்
இந்த உடல் தகுதி தேர்வுக்காக தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 400 விண்ணப்பதாரர்கள் நேற்று அழைக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் நேற்று அதிகாலையிலேயே மாவட்ட விளையாட்டு அரங்கத்துக்கு வந்தனர். அங்கு அவர்கள் அனைவரும் வரிசையாக அமர வைக்கப்பட்டனர். அவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. பின்னர் ஒவ்வொருவரின் உயரம், மார்பளவு அளக்கப்பட்டது. அதே போன்று 100 மீட்டர் ஓட்டப்போட்டியும் நடத்தி உடல் திறன் தகுதி தேர்வு நடந்தது. இந்த பணியில் தூத்துக்குடி தலைமையிடத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மேற்பார்வையில் 5 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 11 இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார், அமைச்சுப்பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
மேலும் இன்று (செவ்வாய்க்கிழமை) 350 விண்ணப்பதாரர்களும், நாளை (புதன்கிழமை) 181 விண்ணப்பதாரர்களும் உடல் தகுதி தேர்வில் கலந்து கொள்ள உள்ளனர்.