கோலாலம்பூர் சென்ற விமானத்தில் நெஞ்சு வலியால் பயணி சாவு
கோலாலம்பூர் சென்ற விமானத்தில் பயணிக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவ சிகிச்சைக்காக சென்னையில் அவசரமாக விமானம் தரை இறங்கியது. ஆனாலும் அந்த பயணி உயிரிழந்து விட்டார்.
ஆலந்தூர்,
சவுதி அரேபியா நாட்டில் உள்ள மதினா நகரில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு 272 பயணிகளுடன் விமானம் சென்று கொண்டு இருந்தது. சென்னை வான்வெளியை கடந்து செல்லும்போது விமானத்தில் பயணித்த மலேசியா நாட்டை சோ்ந்த அட்நம் பின் மாமத் (வயது 55) என்ற பயணிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதை கண்ட அவருடைய மனைவி நபீஷம் பிந்த் கதறி அழுதாா்.
உடனே விமான பணிப்பெண்கள், விமானிக்கு தகவல் தெரிவித்தனர். அவர், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்து, மருத்துவ சிகிச்சைக்காக விமானம் சென்னையில் அவசரமாக தரையிறங்க வேண்டும் என்று அனுமதி கேட்டார்.
சென்னையில் சாவு
உடனே சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், டெல்லியில் உள்ள தலைமை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அந்த விமானம் சென்னையில் அவசரமாக தரையிறங்க அனுமதிக்கவும், மருத்துவ சிகிச்சைக்கு தேவையான உதவிகளை செய்யும் படியும் கூறினா்.
இதையடுத்து சவுதி அரேபியா விமானம், சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது. தயாராக இருந்த சென்னை விமான நிலைய மருத்துவ குழுவினர் விமானத்துக்குள் ஏறி பயணியை பரிசோதித்தனர். ஆனால் பயணி மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனா். அதைகேட்டு அவருடைய மனைவி விமானத்துக்குள் கதறி அழுதாா்.
3 மணி நேரம் தாமதம்
இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள் உயிரிழந்த மலேசிய பயணியின் உடலை சென்னையில் தரை இறக்குவதற்கு அனுமதி கொடுத்தனா். அவருடைய மனைவிக்கும் தற்காலிக அவசர கால விசா வழங்கப்பட்டது.
பின்னர் உயிரிழந்தவரின் உடல் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டது. அவருடைய மனைவியும் கீழே இறங்கினாா். இது பற்றி தகவல் அறிந்து வந்த சென்னை விமான நிலைய போலீசாா், பயணியின் உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனா்.
இதனால் சுமாா் 3 மணி நேரம் தாமதமாக 270 பயணிகளுடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு விமானம் புறப்பட்டு சென்றது. உயிரிழந்தவாின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு பதப்படுத்தப்பட்டு காா்கோ விமானம் மூலம் மலேசியா கொண்டு செல்லப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் அறிவித்தனா்.