காரைக்கால்- திருச்சி பயணிகள் ரெயில் சேவை மீண்டும் தொடக்கம்
பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்ட காரைக்கால்- திருச்சி பயணிகள் ரெயில் சேவை மீண்டும் தொடங்கி உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில் குளறுபடி ஏற்பட்டதால் பயணிகள் குழப்பம் அடைந்தனர்.
பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்ட காரைக்கால்- திருச்சி பயணிகள் ரெயில் சேவை மீண்டும் தொடங்கி உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில் ஏற்பட்டதால் பயணிகள் குழப்பம் அடைந்தனர்.
காரைக்கால்- திருச்சி ரெயில்
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து நாகூர், நாகை, திருவாரூர், நீடாமங்கலம், தஞ்சை வழியாக திருச்சி வரை பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது.
இந்த ரெயில் தினசரி மதியம் 3.10 மணிக்கு காரைக்காலில் இருந்து புறப்பட்டு மாலை 7.15 மணி அளவில் திருச்சியை சென்றடையும். மறுமார்க்கத்தில் தினசரி காலை 9.50 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு, மதியம் 2.05 மணி அளவில் காரைக்கால் வந்தடையும்.
பராமரிப்பு பணிகள்
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி முதல் நீடாமங்கலம் வரை ரெயில் தண்டவாளம் பராமரிப்பு உள்பட பல்வேறு பணிகள் கடந்த 3 மாத காலமாக நடந்து வந்தன. இதன் காரணமாக காரைக்கால் - திருச்சி பயணிகள் ரெயில் காரைக்கால்- தஞ்சை இடையே இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டது.
இதனால் இந்த ரெயிலை நம்பி இருந்த காரைக்கால், நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பயணிகள் கடந்த 3 மாதங்களாக கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
மீண்டும் தொடக்கம்
பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்றதால் நேற்று முதல் காரைக்கால் - திருச்சி பயணிகள் ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது. இதனிடையே தண்டவாளம் பராமரிப்பு பணிகள் முடிந்து கடந்த 3-ந் தேதியில் இருந்து காரைக்கால்-திருச்சி பயணிகள் ரெயில் மீண்டும் இயக்கப்படும் என்று முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் நேற்று முன்தினம் (4-ந் தேதி) இரவு இந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று திடீரென பயணிகள் ரெயில் மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. ரெயில் சேவை மீண்டும் தொடங்குவது குறித்த அறிவிப்பில் ஏற்பட்ட குளறுபடி பயணிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.