கூடுதல் பஸ்கள் இயக்கக்கோரி நள்ளிரவில் பயணிகள் சாலை மறியல் விழுப்புரத்தில் பரபரப்பு
விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு கூடுதல் பஸ்கள் இயக்கக்கோரி நள்ளிரவில் பயணிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்,
போதிய பஸ்கள் இயக்கப்படவில்லை
கோடை விடுமுறை மற்றும் சுபமுகூர்த்த நாட்களில் வெளியூர்களுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்தவகையில் நேற்று முன்தினம் நள்ளிரவு விழுப்புரம் பகுதியை சேர்ந்த ஏராளமான பயணிகள் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகர்ப்புறங்களுக்கு செல்வதற்காக விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்துக்கு வந்தனர். இதனால் பஸ் நிலைய வளாகத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. விழுப்புரம் பணிமனையில் இருந்து சென்னைக்கு போதிய பஸ்கள் இயக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் தென் மாவட்டங்களில் இருந்து விழுப்புரம் வழியாக சென்னை சென்ற பஸ்களும் பேருந்து நிலையத்துக்குள் வராமல் சென்றன.
பயணிகள் சாலை மறியல்
நீண்ட நேரம் காத்திருந்ததில் ஆத்திரமடைந்த பயணிகள் சென்னைக்கு கூடுதல் பஸ்கள் இயக்கக்கோரி திடீரென பேருந்து நிலையம் எதிரே திருச்சி-சென்னை சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், போக்குவரத்துக் கழக அதிகாரிகளை தொடர்புகொண்டு கூடுதல் பஸ்களை இயக்க ஏற்பாடு செய்தனர். அதன்பிறகு வரவழைக்கப்பட்ட பஸ்களில் ஏறி பயணிகள் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் பஸ் நிலைய வளாகத்தில் நள்ளிரவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.