ஆபத்தான நிலையில் பயணிகள் நிழலக கட்டிடம்


ஆபத்தான நிலையில் பயணிகள் நிழலக கட்டிடம்
x
தினத்தந்தி 2 Feb 2023 12:15 AM IST (Updated: 2 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கூத்தாநல்லூர் அருகே ஆபத்தான நிலையில் உள்ள பயணிகள் நிழலக கட்டடித்தை இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்டப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே ஆபத்தான நிலையில் உள்ள பயணிகள் நிழலக கட்டடித்தை இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்டப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

சேதமடைந்த பயணிகள் நிழலகம்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே திருவாரூர், மன்னார்குடி சாலை வழித்தடத்தில் உள்ளது கீழபனங்காட்டாங்குடி கிராமம். இந்த கிராமத்தையொட்டிய சாலையோரத்தில் பயணிகளின் பயன்பாட்டிற்காக பயணிகள் நிழலகம் உள்ளது.

கூத்தாநல்லூர், திருவாரூர், மன்னார்குடி, நாகை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்பவர்கள், பள்ளி கல்லூரி மாணவ,மாணவிகள் இந்த பயணிகள் நிழலகத்தில் நின்று பஸ்சில் ஏறி பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர்.

இடிந்து விழும் நிலை

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இந்த பயணிகள் நிழலகம் எந்தவித பராமரிப்பின்றி சேதம் அடைந்துள்ளது. கட்டிடத்தில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. எப்போதும் வேண்டுமானாலும் பயணிகள் நிழலகம் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.

இதனால் இந்த பயணிகள் நிழலகத்தை பயன்படுத்த முடியாத நிலையில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளனர். மழை, வெயிலில் சாலையோரத்தில் நின்று பஸ்சில் ஏறி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

மாணவிகள் அவதி

பயணிகள் நிழலகம் சேதமடைந்துள்ளதால் மாணவிகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள பயணிகள் நிழலகத்தை இடித்து அகற்றி விட்டு புதிதாக கட்ட வேண்டும் என பொதுமக்கள், மாணவ-மாணவிகள் எதிர்பார்த்துள்ளனர்.


Next Story