ஊட்டி-குன்னூர் இடையே பயணிகள் ரெயில் இயக்க வேண்டும்


ஊட்டி-குன்னூர் இடையே பயணிகள் ரெயில் இயக்க வேண்டும்
x
தினத்தந்தி 16 Oct 2022 12:15 AM IST (Updated: 16 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சாதாரண கட்டணத்தில் ஊட்டி-குன்னூர் இடையே பயணிகள் ரெயில் இயக்க வேண்டும் என்று ரெயில்வே பயனீட்டாளர் ஆலோசனை குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நீலகிரி

குன்னூர்,

சாதாரண கட்டணத்தில் ஊட்டி-குன்னூர் இடையே பயணிகள் ரெயில் இயக்க வேண்டும் என்று ரெயில்வே பயனீட்டாளர் ஆலோசனை குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஆலோசனை குழு கூட்டம்

தென்னக ரெயில்வே மண்டல ரெயில்வே பயனீட்டாளர் ஆலோசனை குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதற்கு தென்னக ரெயில்வே பொது மேலாளர் பி.ஜி.மல்லைய்யா தலைமை தாங்கினார். கூட்டத்தில் ரெயில்வே பயனீட்டாளர் ஆலோசனை குழு உறுப்பினரும், குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவருமான மனோகரன் பேசியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் இயக்கப்படும் பாரம்பரிய மலை ரெயில், சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளுர் மக்களையும் கவர்ந்து உள்ளது. ஆரம்ப காலத்தில் உள்ளூர் மக்கள் மலை ரெயிலை அதிகளவு பயன்படுத்தி வந்தனர். குறிப்பாக கல்லூரி மாணவ-மாணவிகள், அரசு ஊழியர்கள் சீசன் டிக்கெட் எடுத்து குன்னூர்-ஊட்டி இடையே பயணம் செய்தனர். அப்போது ஏழை, எளிய மக்களின் எளிதான போக்குவரத்தாக இருந்தது.

கேன்டீனை திறக்க வேண்டும்

தற்போது மலை ரெயில் சுற்றுலா பயணிகளின் ரெயிலாகவே மாறிவிட்டது. இதற்கு பயண கட்டணம் உயர்வே காரணம் ஆகும். இதனால் சாதாரண மக்கள் பயன்படுத்துவது இல்லாமல் போனது. எனவே, அன்றாடம் வேலைக்கு செல்பவர்கள், மாணவர்களுக்காக காலை, மாலையில் சாதாரண கட்டணம் அடிப்படையில் பயணிகள் ரெயிலை ஊட்டி-குன்னூர் இடையே இயக்க தென்னக ரெயில்வே முன்வர வேண்டும்.

மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே ரெயில் பாதையில் உள்ள ரெயில் நிலையங்களில் கேன்டீன் இல்லாமல் உள்ளது. 5 மணி நேரம் பயண செய்வதால், ரெயில் பயணிகள் தேநீர், காபி போன்ற பானங்கள் கிடைக்காததால் சோர்வடையும் நிலை காணப்படுகிறது. குன்னூர் ரெயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக இருந்த கேன்டீன் மூடப்பட்டது. எனவே, ரெயில் பயணிகளின் நலனுக்காக மூடப்பட்ட கேன்டீனை திறக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


Next Story