வெளிநாடுகளில் இருந்து சேலம் வரும் பயணிகள் தீவிர கண்காணிப்பு-சுகாதார பணிகள் துணை இயக்குனர் தகவல்


வெளிநாடுகளில் இருந்து சேலம் வரும் பயணிகள் தீவிர கண்காணிப்பு-சுகாதார பணிகள் துணை இயக்குனர் தகவல்
x

பி.எப்.-7 உருமாறிய கொரோனா வேகமாக பரவிவருவதால் வெளி நாடுகளில் இருந்து சேலம் வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

சேலம்

தடுப்பு நடவடிக்கை

சீனாவில் புதிய வகை (பி.எப்.-7) கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனால் அந்த நாட்டில் தினமும் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதையொட்டி இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய விமான நிலையங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அதாவது, சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தீவிர கண்காணிப்பு

இந்தநிலையில் சேலத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் அனைவரும் கோவை விமான நிலையத்தில் வைத்து கண்காணிக்கப்படுகின்றனர். அதாவது, அங்கு தெர்மல் ஸ்கேனிங் செய்வதோடு, அறிகுறி இருந்தாலும், இல்லாவிட்டாலும் கொரோனா பரிசோதனையும் செய்யப்படுகிறது.

குறிப்பாக சீனா, வடகொரியா, தாய்லாந்து, ஹாங்காங், ஜப்பான் ஆகிய 5 நாடுகளில் இருந்து வருபவர்களை கண்காணிக்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

அதன்படி சீனா உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்து கோவை விமான நிலையம் வழியாக வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து சேலம் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் நளினி கூறியதாவது:-

98 சதவீதம் பேருக்கு தடுப்பூசி

சீனா உள்ளிட்ட பிறநாடுகளில் பி.எப்.-7 என்ற உருமாறிய கொரோனா வேகமாக பரவி வருவதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சுகாதாரத்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து கோவை விமானம் நிலையம் வழியாக சேலம் மாவட்டத்திற்கு வரும் நபர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி 98 சதவீதம் பேருக்கும், 2-வது டோஸ் தடுப்பூசி 93 சதவீதம் பேருக்கும் போடப்பட்டு உள்ளது. இதுதவிர, குறிப்பிட அளவில் பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. கொரோனாவை எதிர்கொள்ள தேவையான அனைத்து விதமான முன்னெச்சரிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை.

ஆக்சிஜன் படுக்கைகள்

மத்திய அரசு அறிவுறுத்தலின்படி சீனா, தாய்லாந்து உள்பட 5 நாடுகளில் இருந்து கோவை விமான நிலையம் வழியாக சேலத்திற்கு வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்களில் யாருக்காவது கொரோனா அறிகுறி இருந்தால் உடனடியாக பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளிக்கப்படும். சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.

இதுதவிர இரும்பாலை வளாகத்தில் சுமார் 1000 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் தயாராக இருக்கிறது. எனவே பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தலின்படி வெளியில் செல்லும்போது கட்டாயம் முககவசம் அணிந்து செல்ல வேண்டும். இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் இருந்தால் உடனடியாக தடுப்பூசியை போட்டுக்கொள்ளுங்கள்.

ஆலோசனை கூட்டம்

சேலம் மாவட்டத்தில் மீண்டும் கொரோனா அதிகரித்தால், அதை எப்படி சமாளிப்பது, தேவையான மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள்? காய்ச்சல் முகாம்கள் நடத்துவது, கொரோனா பரிசோதனையை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து விரைவில் கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story