நிலைய அதிகாரியிடம் பயணிகள் திடீர் வாக்குவாதம்
விக்கிரவாண்டி ரெயில் நிலையத்தில் நிலைய அதிகாரியிடம் பயணிகள் திடீர் வாக்குவாதம் விழுப்புரம் செல்ல வேண்டியவர்களை இறக்கி விட்டதால் ஆத்திரம்
விக்கிரவாண்டி
சென்னையில் இருந்து நேற்று காலை பயணிகள் ரெயில் ஒன்று புறப்பட்டு விழுப்புரம் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த ரெயில் நேற்று பகல் 12½ மணியளவில் விக்கிரவாண்டி ரெயில் நிலையம் வந்து நின்றது. அதன் பின்னர் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ரெயில் விழுப்புரத்துக்கு செல்லாது எனவே விழுப்புரம் செல்ல வேண்டிய பயணிகள் இங்கேயே இறங்கி செல்லுமாறு அறிவிக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் 60 பேர் ரெயிலில் இருந்து இறங்கி நிலைய அதிகாரியிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சில நிமிடங்களுக்கு பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு பஸ்களில் ஏறி விழுப்புரத்துக்கு சென்றனர். இந்த சம்பவத்தால் விக்கிரவாண்டி ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பயணிகளை இறக்கி விட்ட பின்னர் விழுப்புரம்-சென்னை பயணிகள் ரெயில் விக்கிரவாண்டியில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்றது.