வாகனங்களின் ஆக்கிரமிப்பால் அல்லல்படும் பயணிகள்


வாகனங்களின் ஆக்கிரமிப்பால் அல்லல்படும் பயணிகள்
x
தினத்தந்தி 1 July 2023 12:15 AM IST (Updated: 1 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் ஆட்டோக்கள், சரக்கு வாகனங்களின் ஆக்கிரமிப்பால் பயணிகள் அல்லல்படுகிறார்கள். நிழற்குடை இருந்தும் பயனில்லையே என்றும் புலம்புகிறார்கள்.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் பழைய பஸ் நிலையம் 60 ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி உந்துவண்டி நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்தது. நகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டதாலும், மாவட்ட தலைநகராக தரம் உயர்த்தப்பட்டதாலும் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு 9.6.2000 அன்று திறக்கப்பட்டது. இங்கு நெடுந்தொலைவு செல்லும் பஸ்களும் மற்றும் நகர, தனியார் பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. பில்லூர், தளவானூர், பிடாகம், பெரும்பாக்கம், காணை, கோலியனூர், வளவனூர், அனந்தபுரம், அரசூர், திருவெண்ணெய்நல்லூர் உள்ளிட்ட பல்வேறு கிராமப்புறங்களுக்கு செல்லக்கூடிய அரசு டவுன் பஸ்கள் மட்டும் விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த பஸ் நிலையத்தில் எந்நேரமும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். இங்கிருந்த பழைய கட்டிடங்களையெல்லாம் இடித்து அப்புறப்படுத்திவிட்டு நகராட்சி சார்பில் வணிக வளாக கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளன. அதுபோல் இங்கு வரும் பயணிகள் மற்றும் பள்ளி மாணவ- மாணவிகளின் வசதிக்காக நிழற்குடை கட்டப்பட்டுள்ளது.

வாகனங்களின் ஆக்கிரமிப்பு

ஏற்கனவே இந்த பஸ் நிலையத்தில் 300-க்கும் மேற்பட்ட பயணிகள் நிற்பதற்கு தகுந்தாற்போல் பெரியளவில் இருந்த நிழற்குடையை, பழுதடைந்த கட்டிடங்களை நகராட்சி நிர்வாகத்தினர் இடித்து அகற்றும்போது அந்த நிழற்குடை கட்டிடத்தையும் இடித்து அப்புறப்படுத்திவிட்டனர். அதற்கு பதிலாக அங்கு பெயரளவில் சிறிய அளவிலான நிழற்குடை கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. அதில் வெறும் 50 பயணிகள் மட்டுமே நிற்கும் அளவிற்கு இடமுள்ளது. போதிய இருக்கை வசதிகளும் செய்து தரப்படவில்லை. இருந்தபோதிலும் அது பயணிகளுக்கும், மாணவ- மாணவிகளுக்கும் ஓரளவு பயனுள்ளதாக இருந்து வருகிறது.

இந்த சூழலில் தற்போது கடந்த சில மாதங்களாக அந்த பயணிகள் நிழற்குடையை ஆக்கிரமித்தாற்போல் ஆட்டோக்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால் அந்த பயணிகள் நிழற்குடையை மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலைமை உள்ளது. அப்படியே அதை பயன்படுத்தி நிழற்குடைக்குள் அமர்ந்திருந்தால்கூட எந்தெந்த பஸ்கள், எந்தெந்த நேரத்தில் வருகிறது என்பதை அறிய முடியாமல் அவர்கள் சிரமப்படுகின்றனர். அந்த நிழற்குடைக்குள் அமர்ந்திருந்தால் பஸ் வருவது தெரியாமல் சில சமயங்களில் பஸ்சை தவற விட்டுவிடுகின்றனர். அந்தளவிற்கு பயணிகள் நிழற்குடை முன்பு ஆட்டோக்கள், சரக்கு வாகனங்கள் நிறுத்துமிடமாக மாற்றிவிட்டனர்.

பயனில்லாத நிழற்குடை

இதனால் பயணிகள் நிழற்குடை இருந்தும் அது தற்போது யாருக்கும் பயனில்லாத நிழற்குடையாக இருந்து வருகிறது. இதன் காரணமாக பஸ்சிற்காக நீண்ட நேரம் காத்திருக்கும் மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள், ஒதுங்கி நிற்பதற்குக்கூட இடமில்லாமல் கொளுத்தும் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் பஸ் ஏறிச்செல்ல வேண்டியுள்ளது. எனவே மணிக்கணக்கில் பஸ்களுக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் பயணிகளுக்கு போதுமான நிழற்குடை வசதியை நகராட்சி நிர்வாகம் கட்டித்தர வேண்டும். அதேநேரத்தில் பொதுமக்கள், மாணவ-மாணவிகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாதவாறு இருக்க, தற்போதுள்ள நிழற்குடையின் முன்பு நிறுத்தப்படும் ஆட்டோக்கள், சரக்கு வாகனங்களை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் இங்குள்ள பஸ் நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்ற நிலையில் அவர்களுக்கு தேவையான குடிநீர் வசதி மற்றும் போதிய மின்விளக்கு வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பதோடு, சென்னை போன்ற பெருநகரங்களைப்போல் மேற்கூரை வசதிகளுடன் கூடிய பயணிகள் நிழற்குடை அமைத்து அதன் வழியாக அந்தந்த மார்க்கங்களுக்கு பஸ்கள் செல்லும் வகையில் நகராட்சி நிர்வாகம் உரிய வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story