நிறுத்தங்களில் முறையாக நிற்காமல் ஓடும் அரசு பஸ்கள் பயணிகள் கருத்து
நிறுத்தங்களில் முறையாக நிற்காமல் ஓடும் அரசு பஸ்கள் குறித்து பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக விழுப்புரம் கோட்டத்தின் சார்பில் 3,020 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்களில் தினமும் 12 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். இதில் கடலூர் போக்குவரத்து கழகம் சார்பில் 580 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் சுமார் 270 டவுன் பஸ்கள் உள்ளன. அவைகளில் தினமும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்கிறார்கள்.
இதற்கிடையே மாநகரம் மற்றும் நகரம், கிராம பகுதிகளில் ஓடும் பல பஸ்கள், அதற்கான நிறுத்தங்களில் முறையாக நிறுத்தப்படுவது இல்லை. பஸ் நிறுத்தங்களில் இருந்து 50 அடிகளுக்கு முந்தியோ அல்லது 50 அடிகளுக்கு பிந்தியோ நிறுத்தப்படுகின்றன. பயணிகளை அங்குமிங்குமாக ஓடவிடுகிறார்கள். இதனால் பயணிகள் தவறிவிழும் நிலை ஏற்படுகிறது என்ற புகார்கள் எழுந்துள்ளன.
இதுபற்றி பஸ் பயணிகள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
ஓடிச்சென்று ஏறும் மாணவர்கள்
கடலூர் வக்கீல் ராமச்சந்திரன் கூறும்போது, கடலூர் மாநகரில் பஸ் நிலையத்தை தவிர பேருந்து நிறுத்தங்களில் எந்தவொரு பஸ்சும் சரிவர நிற்பதில்லை. கடலூர் மஞ்சக்குப்பத்தில் இரண்டு பஸ் நிறுத்தங்கள் உள்ளன. இதில் ஒரு நிறுத்தத்திற்குள் ஒரு சில பஸ்களை தவிர பிற பஸ்கள் ஏதும் செல்லாமல் நடுரோட்டிலேயே நின்று பயணிகளை ஏற்றிச்செல்கின்றன. மற்றொரு புறத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தை தாண்டி தான் எப்போதும் பஸ்கள் நிறுத்தப்படுகிறது.
இதனால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் எப்போதுமே பஸ்சின் பின்னால் ஓடிச்சென்று தான் ஏறவேண்டிய நிலை உள்ளது. இதனால் சில சமயங்களில் தடுமாறி கீழே விழுந்து பயணிகள் விபத்தில் சிக்கும் நிலையும் உள்ளது. இதுதொடர்பாக எத்தனை முறை புகார் அளித்தாலும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. அதனால் பஸ்கள் அனைத்தும் முறையாக நிறுத்தங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
பயணிகள் அவதி
புலிகரம்பலூர் சந்திரசேகர் கூறும்போது, தனியார் பஸ்கள் கூட சரியான இடத்தில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கின்றன. ஆனால் அரசு பஸ்கள், நிறுத்தங்களில் ஒரு போதும் சரியாக நிற்பதில்லை. சில அடி தூரம் சென்று தான் நிற்கின்றன. இதனால் வயதானவர்கள், கர்ப்பிணிகள், நோயாளிகள் உள்ளிட்டோர் கடும் அவதியடைந்து வருகின்றனர். சில நேரங்களில் அரசு பஸ்கள் நிற்காமலே செல்கின்றன. அதனால் கிராம பகுதிகளின் வழியாக இயக்கப்படும் டவுன் பஸ்களின் செயல்பாடுகளை போக்குவரத்து கழக அதிகாரிகள் மேம்படுத்த வேண்டும்.
குறிப்பாக பஸ்களை நிறுத்தத்தில் இருந்து தள்ளியோ அல்லது பஸ் நிறுத்தங்களுக்கு முன்போ நிறுத்திக்கொண்டு பயணிகளை அங்குமிங்கும் ஓடவிடுவதை முதலில் நிறுத்த வேண்டும். இதனால் குழந்தைகளுடன் பஸ் ஏற வருபவர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே அனைத்து பஸ்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிறுத்தங்களில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்றார்.
இலவச பயணம்
பெண்ணாடம் அடுத்த நந்திமங்கலம் திலகவதி கூறும்போது, பஸ் நிற்குமிடம் என்ற பெயர் பலகை உள்ள இடங்களில் பெரும்பாலான பஸ்கள் நிற்பதே இல்லை. தனியார் பஸ்கள் முறையாக நிறுத்தினாலும், அரசு பஸ்கள் தான் சரிவர நிறுத்தப்படுவதில்லை. மேலும் கிராம பகுதிகளுக்கு சரிவர அரசு டவுன் பஸ்களும் இயக்கப்படுவதில்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே பஸ் நிறுத்தங்களில் உரிய முறையில் அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற, இறங்க வழிவகை செய்ய வேண்டும். கிராம பகுதிகளுக்கு கூடுதல் டவுன் பஸ்கள் இயக்கப்பட வேண்டும். அதேபோல் இலவசமாக பயணம் செய்யும் பெண்களை கண்டக்டர்கள் ஏளனமாக நடத்துவதை கண்டறிந்து போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்றார்.
நிரந்தர தீர்வு
திட்டக்குடி அருகே கொரக்கவாடி சக்திவேல் கூறும்போது, பெண்களுக்கு இலவசம் என்று அறிவிக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை பெரும்பாலான டவுன் பஸ்களை கிராம பகுதிகளில் காண முடிவதில்லை. பெயரளவுக்கு மட்டும் காலை, மாலை நேரத்தில் இயக்கப்படுகிறது. இதனால் பெண்கள், காசு கொடுத்து பயணம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அரசு பஸ்களில் கூட்டம் இருந்தால், சிறிய நிறுத்தங்களில் நிற்பதே கிடையாது.
பஸ் நிறுத்தங்களில், பஸ்களை நிறுத்தாமல் தூரத்தில் கொண்டு நிறுத்துவதால் உயிரை கையில் பிடித்துக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் வாகனங்களுக்கு இடையே ஆபத்தான நிலையில் ஓடிச்சென்று பஸ்களை பிடிக்க வேண்டியிருக்கிறது. அவ்வாறு ஏறும்போது மாணவிகள் அடிக்கடி சாலையில் தவறி விழுந்து காயமடைகின்றனர். முன்பெல்லாம் போக்குவரத்து கழக அதிகாரிகள் அவ்வப்போது சாலைகளில் ஆங்காங்கே நின்று, பஸ்கள் சரியாக இயக்கப்படுகிறதா? என்று சோதனை செய்வார்கள். அப்போது பயணிகளும் தங்கள் குறைகளை தெரிவிப்பார்கள். ஆனால் இப்போது எந்தக் குறையை யாரிடம் தெரிவிப்பது என்று தெரியாமல் பயணிகள் குழப்பத்தில் உள்ளனர். எனவே இந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றார்.
ஏமாற்றம்
சிதம்பரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் திருமாறன் கூறுகையில், பெரும்பாலான அரசு பஸ்கள் நிறுத்தங்களில் முறையாக நிறுத்தப்படுவதில்லை. பேருந்து நிறுத்தம் ஒரு இடத்தில் இருக்கும், தள்ளி சென்று நிறுத்தி பயணிகளை மட்டும் இறக்கி விட்டு சென்று விடுகின்றனர். தற்போது அரசு பஸ்களில் மகளிருக்கு இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளதால் சில பேருந்து நிறுத்தங்களில் பெண்கள் நின்றாலே பஸ்களை நிறுத்தாமல் சென்று விடுகின்றனர். இதனால் அங்கு நிற்கும் ஏராளமான பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். சிதம்பரம் மேலவீதியில் பேருந்து நிறுத்தத்தில் பஸ்கள் உள்ளே சென்று பயனிகளை ஏற்றி செல்லுமாறு பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான பஸ்கள் பேருந்து நிறுத்தம் உள்ளே செல்லாமல் வெளியே நிறுத்தி பயணிகளை ஏற்றி சென்று விடுகின்றனர். இதனால் பேருந்து நிறுத்தத்தில் உள்ளே நிற்கும் பயணிகள் ஏமாற்றமடைகின்றனர் என்றார்.
கடலூரில் பெயர் வெளியிட விரும்பாத பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் கூறும் போது, 'பயணிகளை பாதுகாப்பாக அழைத்து செல்வதற்குத்தான் அதிக முன்னுரிமை தருகிறோம். பயணிகள் பாதிக்கப்பட்டால் எங்களுக்கும் தண்டனை அதிகமாக தரப்படுகிறது. பயணிகளை ஓடவிட்டு அவர்கள் சாலையில் விழுந்து காயமடைந்தால் போக்குவரத்து கழகத்துக்குத்தான் நஷ்டம் என்பதை நாங்கள் அறிவோம். இதனை ஒரு சிலர் மீறுவதால் அனைவருக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது. இதனை அதிகாரிகள் தான் சரிசெய்ய வேண்டும்' என்றனர்.
சிறந்த சேவை
போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும் போது, 'மாநகரில் இயக்கப்படும் பஸ்களில் பணியில் ஈடுபடும் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு போதிய அறிவுரைகள், பணிமனை மேலாளர்கள் மூலம் வழங்கப்படுகிறது.
இருந்தும் ஒரு சிலர் பயணிகளிடம் வம்பு பேசுவது நிர்வாகத்தின் கவனத்திற்கு வருகிறது. பஸ்களில் புகார் செய்யும் எண்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன. அவற்றில் புகார்களை தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பயணிகளுக்கு சிறந்த சேவையை எப்போதும் வழங்க வேண்டும் என்பதில் போக்குவரத்து கழகம் உறுதியாக இருக்கிறது. அதனை தொடர்ந்து செய்யும்' என்றனர்.